Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?
TNPSC Group 4 Exam 2024:வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி மட்டுமின்றி இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் பதவிகளுக்கும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது
தமிழ்நாட்டில் மொத்தம் 6,244 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கேள்வித்தாள் எப்படி இருந்தது? கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாகும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே உள்ள இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி மட்டுமின்றி இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் பதவிகளுக்கும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.
இன்வேலிட் மதிப்பெண் முறை
இந்த முறை புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கேள்விக்கு தவறான பதிலை டிக் செய்து, பிறகு அதை அடித்துவிட்டு, வேறு ஒரு பதிலை தேர்வு செய்தால், அந்த கேள்விக்கான மதிப்பெண் மதிப்பெற்றதாக (இன்வேலிட்) கருதப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல ஏ, பி, சி, டி என ஒவ்வொரு எழுத்துக்கும் எத்தனை விடைகள் குறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணி, அதைப் பதிவிடவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காகத் தனியாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.
என்னென்ன கட்டுப்பாடுகள்?
விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்பட்டனர். 09 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்த பின்னரே, தேர்வர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 12.45 மணிக்கு முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தேர்வர் அவருக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் (தேர்வுக் கூட அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள) மட்டுமே தேர்வு எழுத வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதேபோல தேர்வு மையத்தினை மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று (ஜூன் 9) மாநிலம் முழுவதும் 7247 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.
தேர்வு எப்படி இருந்தது?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை எழுதிய ராஜேஷ் என்னும் தேர்வர் கூறும்போது, ’’பொதுத் தமிழ் எளிதாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்தன. இலக்கணப் பகுதியும் அத்தனை கடினமாக இல்லை. அதேநேரம் ஜிஎஸ் தாளும் தற்போதைய நிகழ்வுகளும் கடினமாக இருந்தன’’ என்று தெரிவித்தார்.
பெயர் கூற விரும்பாத மாணவி ஒருவர் கூறும்போது, ’’வழக்கம்போலவே தமிழ் பாடமும் பொது அறிவுத் தாள்களும் எளிமையான கேள்விகளைக் கொண்டிருந்தன. நன்கு படித்திருந்ததால் பொதுப் பாடப் பகுதி கேள்விகளையும் எழுத முடிந்தது. சரி, தவறு வகைமை கேள்விகளைத் தாண்டி கான்செப்ட் தொடர்பான கேள்விகள் நிறைய கேட்கப்பட்டிருந்தன’’ என்று கூறியுள்ளார்.
அதேபோல ஜிஎஸ் பகுதி கடினமாக இருந்ததால் கட்- ஆஃப் சற்றே குறையலாம் என்று தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு?
குரூப் 4 தேர்வின் முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.