'தலைமை ஆசிரியர் ஸ்டாலின், உதவி HM உதயநிதி: நான் யார் தெரியுமா?'- அமைச்சர் அன்பில் ருசிகரம்!
தமிழக முதல்வர் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதனை மறக்கவும் மாட்டோம், மறுக்கவும் மாட்டோம். இதை முதல்வர் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமை ஆசிரியர் என்று முதல்வர் ஸ்டாலினைக் குறிப்பிட்டுள்ளார். உதவி தலைமை ஆசிரியர் என்று உதயநிதியையும் வகுப்பு ஆசிரியர் என்று தன்னையும் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சூர்யா பொறியியல் கல்லூரியில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவசக் கல்வி மற்றும் ஆசிரியர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது:
’’பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பணி என்பது சாதாரண பணி அல்ல. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் என்ற மல்லர் கம்பத்தில் தினமும் ஏறி, இறங்கும் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
மறக்கவும் மாட்டோம், மறுக்கவும் மாட்டோம்
ஆசிரியர்களின் மகிழ்ச்சியே அரசின் மகிழ்ச்சி என இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதனை மறக்கவும் மாட்டோம், மறுக்கவும் மாட்டோம். இதை முதல்வர் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார்.
உதவி தலைமை ஆசிரியர் ஒருவர் வந்துள்ளார்
நமக்கான தலைமை ஆசிரியர் முதல்வர் ஸ்டாலின். இந்த ஆண்டு முதல் நமக்கு உதவி தலைமை ஆசிரியர் ஒருவர் வந்துள்ளார் அவர்தான் உதயநிதி ஸ்டாலின். நான் உங்களின் வகுப்பு ஆசிரியர். என் பணி என்பது நீங்கள் என்னவெல்லாம் கேட்கிறீர்களோ அதனை முதல்வரிடம் கொண்டு சென்று அதனை வாங்கித் தரும் பணியைத்தான் செய்து வருகிறேன். கண்டிப்பாக நான் அதனை செய்வேன்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து இருந்தார்.
தேர்வுக்குச் செல்ல தயாராகும் மாணவர்களைப் போல்
அதேபோல கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில், ’’பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நான் இருந்தாலும் என்னுடைய Headmaster முதலமைச்சர்தான்; அவரை பார்க்கச் செல்லும்போது தேர்வுக்குச் செல்ல தயாராகும் மாணவர்களைப் போல்தான் நானும் தயாராகிச் செல்வேன்.
ஆனாலும், எங்களைவிட பல செய்திகளை அவர் முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பார்; அப்படிப்பட்ட தலைமை ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகதான் மாணவராகிய நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.