TNPSC Group 4: குரூப் 4 தேர்வு; முக்கிய அப்டேட்டுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி! என்ன அது?
தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குறைதீர் அழைப்பு மையத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளாக இரண்டை கூறியுள்ளது டிஎன்பிஎஸ்சி.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கணக்கு தொடங்கப்பட்டது.
இதில் குரூப் 1, 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கைகள், தேர்வு தேதிகள், பிற தேர்வுகள் விவரம், தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு குறித்த பல்வேறு அப்டேட்டுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதி விரைவாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள்
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் அதாவது அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின. குரூப் 4 தேர்வு எழுத 20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், 4,45,345 பேர் தேர்வை எழுதவில்லை.
தேர்வை 15,91,429 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களில் அதி விரைவாக வெளியிடப்பட்டன. நேற்று அதாவது அக்டோபர் 28ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது.
10 வேலை நாட்கள் மட்டுமே
இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்க, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய 10 வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குறைதீர் அழைப்பு மையத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளாக இரண்டை கூறியுள்ளது டிஎன்பிஎஸ்சி.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 4 தேர்வு பணிகள்) சான்றிதழ் சரிபார்ப்பு - தமிழ் வழியில் கல்வி பயின்றோர் சான்றிதழ்
* தமிழ் வழியில் கல்வி பயின்றோர் என உரிமை கோரும் தேர்வர்கள் அறிவிக்கை எண் - 01/2024, பிற்சேர்க்கை ॥ இல் உள்ள படிவத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* தேர்வர்கள் சான்றிதழில் தங்களுடைய பெயர், வகுப்பு / பட்டம், பயின்ற ஆண்டு ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* மேலும் சான்றிதழை அறிவிக்கையில் குறிப்பிட்டவாறு உரிய அலுவலரிடம் பெறப்பட்டதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* இணைய வழியில் பெறப்படாத சான்றிதழில் கல்வி நிறுவனத்தின் அலுவலக முத்திரை மற்றும் நாள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்களை எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் ?
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 4 கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.