GATE 2023: கேட் 2023-க்கான ஹால்டிக்கெட் வெளியீடு; ஐஐடி கான்பூர் முக்கிய அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தாமதமாகி உள்ளதாகவும், ஜனவரி 9 ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது.
![GATE 2023: கேட் 2023-க்கான ஹால்டிக்கெட் வெளியீடு; ஐஐடி கான்பூர் முக்கிய அறிவிப்பு GATE 2023 Admit Card Release Postponed Hall Ticket Available for Download from January 9th IIT Kanpur GATE 2023: கேட் 2023-க்கான ஹால்டிக்கெட் வெளியீடு; ஐஐடி கான்பூர் முக்கிய அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/4832ca184b0876824ecf1ee563bd7b021672722904614332_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2023ஆம் ஆண்டுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வாக நடத்தப்படும் கேட் தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகக் காரணங்களால் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தாமதமாகி உள்ளதாகவும், ஜனவரி 9ஆம் தேதி ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர்கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.
ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2023-24ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள கேட் தேர்வுக்கு, தேர்வர்கள் ஆன்லைன் மூலம் gate.iitk.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்த்தனர்
ஹால்டிக்கெட் வெளியீடு
கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் ஆக இருந்த நிலையில், இன்று (ஜனவரி 3ஆம் தேதி) முதல் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாகக் காரணங்களால் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தாமதமாகி உள்ளதாகவும், ஜனவரி 9ஆம் தேதி ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. 2022-ம் ஆண்டில் இருந்து மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது.
யாரெல்லாம் எழுதலாம்?
கேட் 2023 தேர்வை, பொறியியல் பட்டதாரிகளும் கடைசி ஆண்டு மாணவர்களும் எழுதலாம். பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல், அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு பட்டதாரிகளும் இந்தத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள். தற்போது பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)