Free TNPSC coaching: குரூப் 1, 2 தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி பெறலாம்; எப்படி?
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, முதல்நிலை மற்றும் குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்குக் கட்டணமின்றி இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, முதல்நிலை மற்றும் குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்குக் கட்டணமின்றி இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தெரிவித்துள்ளதாவது:
’’அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அக். 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இணையதளங்களின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
குரூப் 1 போட்டித் தேர்வுக்கு முறைப்படி விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்குக் கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்க டாக்டர்.அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் தயாராக உள்ளது.
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கும், பயிற்சி எடுத்து வருகிறார்கள். தேர்வுக்குக் குறுகிய கால அளவே உள்ளதால், தற்போது குரூப் 1 அல்லது குரூப் 2 தேர்விற்குப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ள மாணவர்களுக்கு இப்பயிற்சி வழிகாட்டுதலாக அமையலாம்.
குரூப் 1 மற்றும் 2-க்கான மாதிரித் தேர்வு (Test batch and discussion) வார இறுதி நாட்களில் நடைபெறும். பாடத்திட்டங்களின் அளவிற்கேற்ப எழுத்துத் தேர்வின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
மாணவர்களிடையே படிப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்க, குழுவாகக் கலந்துரையாடலில் ஈடுபடுவது மிகுந்த பயனளிக்கும். தேர்வாணையம் தான் நடத்த உள்ள மொழிப்பாடத் தேர்வில் மாணவர்களுக்குத் தகுதி நிலையை நிர்ணயம் செய்யும் நிலையுள்ளது. உறுதியாகத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
மாணவர்களின் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி பொதுவான பட்டப்படிப்பு என்றாலும், வயது உச்ச வரம்பு மற்றும் இதர விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளத்தைச் சென்று (www.tnpsc.gov.in ) பார்க்கவும்.
குரூப் 1 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்ப ரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள், மாதிரித் தேர்வும் அதையொட்டிய கலந்துரையாடல் வடிவத்திலேயே இருக்கும்.
தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனைகளை வழங்குவார்கள். அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
இவ்வகுப்புகளை, டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தி வருகிறது.
தலித்துகள் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இங்கு பயின்ற 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பல்வேறு நிலைகளில் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். சென்னையில் ஏற்கெனவே பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மாணவர்கள் தேர்விற்காகப் படித்து, வழிகாட்டுதல் தேவைப்படும் மாணவர்கள் மட்டும் தங்களைப் பதிவு செய்து கொள்ளவும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 வரை வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும்.
மாதிரித் தேர்வுடன் கூடிய கலந்துரையாடலின் சிறப்பம்சமே எல்லா மாணவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்று தனது திறமையை மேம்படுத்துவதுடன் தேர்வில் அதிகபட்ச பலத்தோடு வெற்றி பெறுவதுதான்.
வகுப்புகள் 6.8.22 அன்று முதல் தொடங்குகிறது. மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முழுமையாகப் பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதாரத்தின் நகலுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் கொண்டு வர வேண்டும். முறையாக விண்ணப்பித்தவர்கள் மட்டுமே வகுப்பில் சேர தங்களைப் பதிவு செய்துகொள்ள இயலும்.
பதிவுக் கட்டணம் - ரூ.500/-.
பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றவர்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு பதிவுக் கட்டணத்தில் அவர்களின் சூழலுக்குத் தகுந்தாற்போல் பகுதியாகவோ, முழுமையாகவோ விலக்கு அளிக்கப்படும். பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே வகுப்பில் பங்கேற்க இயலும்.
அரசின் விதிமுறைகள் கட்டாயம்
மேலும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட தனிமனித இடைவெளியுடன், கால இடைவெளியில் சானிடைசரை முறையாகப் பயன்படுத்த வேண்டும். முகக்கவசம் அவசியம். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் அவசியம்.
பயிற்சி நடைபெறும் இடம்
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம்,
சிஐடியு அலுவலகக் கட்டடம்,
இரண்டாம் தளம்,
நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ரஹாரம், ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.
பயிற்சி பெற விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்
செளந்தர் 90950 06640
அமலா 63698 74318.
ஜனனி 97906 10961
வாசுதேவன் 9444641712.
மேலும் விவரங்களுக்கு,
ஒருங்கிணைப்பாளர் ந. வாசுதேவன்,
Dr.அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,
வடசென்னை
9444641712.’’
இவ்வாறு டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.