Engineering Semester: பொறியியல் செமஸ்டர் தேர்வுகளில் 38% பேர் மட்டுமே தேர்ச்சி; வெளியான அதிர்ச்சித் தகவல்
38% மாணவர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 62% மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது சில பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 62% மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது சில பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.
2021 நவம்பர் - டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வு, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தள்ளிப் போனது. கடந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களில் எழுதப்பட்ட செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது. இந்த சூழலில் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன.
மாநிலம் முழுவதும் 440-க்கும் மேற்பட்ட இணைப்பு பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவை செயல்பட, ஆண்டுக்கு ஒருமுறை இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் ஆகும்.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உயர்மட்டக் குழு கடந்த மே - ஜூன் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் தரம் குறைந்ததாக இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், போதிய உட்கட்டமைப்பு வசதிகளில் 50 சதவீதப் பற்றாக்குறையோடு 225 பொறியியல் கல்லூரிகள் இருந்தன.
62 பொறியியல் கல்லூரிகளில் 25 - 50% பற்றாக்குறை இருந்தது. அதேபோல 23 பொறியியல் கல்லூரிகளில் முதல்வர்களின் தகுதி குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. 166 கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதி போதாமை இருந்தது. இதில் 225 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா கால கற்றல் இழப்பு, ஆன்லைன் வகுப்புகள் காரணமாக மாணவர்களின் கற்றல் விகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், விரைவில் கற்றல் இழப்பு சரிசெய்யப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்