'கணினி அறிவியல், ஏஐ வேண்டாம்'- பொறியியல் தரவரிசையில் டாப் மாணவர்கள் கொடுத்த ஷாக்!
எவர்க்ரீன் படிப்பான கணினி அறிவியல் (Computer Science), ட்ரெண்டிங் படிப்புகளான ஏஐ (Artificial Intelligence), இயந்திரக் கற்றல், தரவு அறிவியலை டாப் ரேங்க் மாணவர்கள் விரும்பவில்லை.
தமிழ்நாட்டு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியான நிலையில், முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவர்கள், தங்களுக்குப் பிடித்த பாடப்பிரிவு குறித்துப் பேசியுள்ளனர். அவர்கள் யாருமே எவர்க்ரீன் மற்றும் ட்ரெண்டிங் படிப்புகளான கணினி அறிவியல், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைத் தேர்வு செய்யவில்லை.
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் நேற்று முன்தினம் (ஜூலை 10) வெளியிட்டார். இதில், செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்ட மாணவி நிலஞ்சனா இரண்டாவது இடத்தையும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
அஸ்விதா என்னும் அரியலூர் மாணவி 4ஆம் இடத்தையும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சஃபீக் ரஹ்மான் என்னும் மாணவர் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே 200-க்கு 200 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலத்தைச் சேர்ந்த ரவணி என்னும் மாணவி, 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்று இருந்தார்.
இசிஇ படிக்க விரும்பும் டாப் ரேங்க் மாணவி
இந்த நிலையில் முதலிடம் பிடித்த தோஷிதா என்னும் மாணவி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிஇ எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (ECE) படிக்க விரும்புகிறார். இளநிலை பொறியியலை முடித்த பிறகு, சிப் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட விஎல்எஸ்ஐ (VLSI) படிப்பை முதுகலை படிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல 2ஆவது இடம் பிடித்த மாணவி நிலஞ்சனா, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். முடித்துவிட்டு வளாக நேர்காணலில் வேலைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற மாணவி ரவணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிஇ படிப்பைத் தேர்வு செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். விஞ்ஞானி ஆகி, நாட்டுக்கு சேவை செய்ய விருப்பம் எனவும் ரவணி தெரிவித்துள்ளார்.
எப்போதுமே வரவேற்பைப் பெறும் எவர்க்ரீன் படிப்புகளாகக் கருதப்படும் கணினி அறிவியல் (Computer Science) பொறியியல், ட்ரெண்டிங் படிப்புகளான செயற்கை நுண்ணறிவு (ஏஐ- Artificial Intelligence), இயந்திரக் கற்றல் (Machine Learning), தரவு அறிவியல் (Data Science) படிப்புகள் ஆகியவற்றை தரவரிசைப் பட்டியலில் முதன்மை இடத்தைப் பிடித்த மாணவர்கள் விரும்பவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொறியியல் கலந்தாய்வு எப்போது?
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 அன்று வெளியான நிலையில், சேவை மையங்கள் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை 18ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூலை 22ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது. செப்டம்பர் 11ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.