உயர் கல்வி கனவு நனவாகும்! தேனியில் நாளை கல்வி கடன் முகாம்: மாணவர்களே தவறவிடாதீர்கள்!
மாணவர்கள் எளிதான கடனை பெற முடியும். இந்த சிறப்பு கல்வி கடன் முகாமை பொறுத்தவரை கல்வியாண்டின் தொடக்கத்தில் தான் நடத்தப்படுகிறது.
ஏழை, எளிய மக்கள் எளிதாக உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடனை பொறுத்தவரை படித்து முடித்த பின்னர் வட்டி, அசலை கட்டும் வகையில் இருக்கும். இந்த கடனை பலருக்கும் எப்படி பெறுவது என்று தெரியாது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கல்வி கடன் முகாமினை தமிழக அரசு நாளை நடத்துகிறது. மாணவர்கள் பங்கேற்க தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏழை எளிய மக்கள் உயர்கல்விக்குத் தேவையான கல்விக் கடன்களை உடனடியாகப் பெற்றுத் தருவதற்காக,தமிழக அரசு சிறப்பு கல்வி கடன் முகாம்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நாள் அமைக்கிறது. அந்த முகாமில் குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவர்கள் நேரடியாக சென்று பயன் பெறலாம். வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் சிக்கல்களைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து வழங்குவதால், மாணவர்கள் எளிதான கடனை பெற முடியும். இந்த சிறப்பு கல்வி கடன் முகாமை பொறுத்தவரை கல்வியாண்டின் தொடக்கத்தில் தான் நடத்தப்படுகிறது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்துப் பட்டப்படிப்பு மாணவர்கள் பங்கேற்று கல்வி கடன் பெற முடியும். கல்விக் கடன் கிடைக்காமல் அவதிப்படும் மாணவ , மாணவிகள் முகாமில் சென்றால் உடனே கல்வி கடன் பெற முடியும். மேலும் எந்த வங்கியில், எவ்வளவு கடன் பெறலாம்.. என்னென்ன வசதிகள் உள்ளன. கல்வி கடன் சம்பந்தமான சந்தேகங்களை அரசு அந்த முகாமில் நிவர்த்தி செய்கிறது. இது பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி கொடுவிலார் பட்டியில் உள்ள கம்மவார் சங்க தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் வரும் செப்டம்பர் 17ம் தேதி (நாளை ) நடைபெறும் என ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கல்வி கடன் முகாம் கொடுவிலார் பட்டியில் உள்ள கம்மவார் சங்க தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில் என்ஜினீரியங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரி, சட்டக் கல்லூரி போன்ற அனைத்து வகையான கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்களின் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், முகவரிக்கான சான்று, சாதி சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆதார் அட்டை பெற்றோரின் பான் கார்டு, வருமான சான்று, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்கலாம். வெளியூர்களில் தங்கி பயிலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளும் இம்முகாமில் பங்கேற்கலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.





















