புதுச்சேரியில் 33 பள்ளிகளை மூட கல்வித்துறை அதிரடி உத்தரவு... வெளியான அதிர்ச்சி தகவல்கள்...பெற்றோர்களே உஷார்
புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 33 பள்ளிகளை மூட கல்வித்துறை அதிரடி உத்தரவு. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்.
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு செய்ததில் தெரிய வந்ததுள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு செய்ததில் தெரிய வந்ததுள்ளது. அது சட்டத்துக்கு முரணானது என்று கருதப்படுகிறது. முதல் கட்டமாக அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூடுமாறு 15.12.2023 அன்று பள்ளிக் கல்வித் துறையானது உத்தரவிட்டது. மேலும், அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் எனவும் அறிவுறித்தியது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக மேலும் 33 அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு பள்ளிக் கல்வித் துறையானது 25.06.2024 அன்று உத்தரவிட்டுள்ளது. எனவே, அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏதேனும் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால், பள்ளி நிர்வாகமோ அல்லது பெற்றோர்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையின் போது, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் முறையான அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுறது.
அவ்வாறு, அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துவது, "புதுச்சேரி பள்ளிக் கல்விச் சட்டம், 1987" மற்றும் 'பாண்டிச்சேரி பள்ளிக் கல்வி விதிகள், 1996" ஆகியவற்றின் படி விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகும். மேலும், 'குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் (RTE), 2009' பிரிவு 18(5)ன் படி, "அங்கீகாரச் சான்றிதழைப் பெறாமல் பள்ளியை தொடர்ந்து நடத்துபவர் அங்கீகாரத்தை திரும்பப் பெற்ற பிறகு, ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதம் விதிக்கப்படும், மேலும் தொடர்ந்து விதி மீறல்கள் இருந்தால், அத்தகைய மீறல் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது