CUET PG 2024: க்யூட் முதுநிலைத் தேர்வு விண்ணப்பத்தில் பிப்.13 வரை திருத்தம் செய்யலாம்; எந்த தகவலில்? எப்படி?
CUET PG 2024 Correction Window: முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிப்ரவரி 13ஆம் தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் மாநிலப் பல்கலைக்கழகங்களும் தனியார் பல்கலைக்கழகங்களும் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே தற்போது வரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
எனினும் முதுகலை படிப்புக்கான க்யூட் நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயம் ஆக்கப்படவில்லை. அதேநேரத்தில் சேர்க்கை நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்களும் தற்போது க்யூட் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.
தேர்வு எப்போது?
இந்த சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) மார்ச் மாதம் 11 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பிப்ரவரி 11 முதல் 13ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். 13ஆம் தேதி இரவு 11.50 மணி வரை திருத்தம் செய்யலாம். தேர்வு மையங்கள் குறித்த விவரம் மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வை நடத்தும் என்டிஏ தெரிவித்துள்ளது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து என்டிஏ கூறும்போது, ’’குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு திருத்தங்கள் எதையும் மேற்கொள்ள முடியாது. கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு / நெட் பேங்க்கிங் / யுபிஐ ஆகிய முறைகளின் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்’’ என்று தெரிவித்துள்ளது.
எனினும், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, நிரந்தர மற்றும் தற்காலிக முகவரி ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ள முடியாது. அதே நேரத்தில், தேர்வர் பெயர் அல்லது தந்தை பெயர் அல்லது தாயின் பெயர் அல்லது
புகைப்படம் அல்லது கையொப்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான முழு விவரங்களுக்கு: https://cdnasb.samarth.ac.in/v2/2024/pg/pg-site-admin24/public-notice/Public+Notice+regarding+cor rection+in+the+particulars+of+the+online+application+form+of+CUET+(PG)+-+2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://pgcuet.samarth.ac.in./