அரசுப் பள்ளிகளை ஐடிஐகளாக மாற்றுவதா? மாணவர் எதிர்காலத்தை பாதிக்கும் ஆபத்தான நடவடிக்கை! கல்வி பாதுகாப்பு கமிட்டி எச்சரிக்கை
மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என பள்ளிகளை மூடுதல் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வந்து கொண்டுள்ள இந்த சூழலில் எதற்கு ஐடிஐ நிறுவும் நடவடிக்கை?

தமிழ்நாடு அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ITI) நிறுவுதல் சார்ந்த மாணவர் விரோத கல்வி விரோத நடவடிக்கையைக் கண்டிப்பதாக அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் உறுப்பினர்கள் கூறி உள்ளதாவது:
’’தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ஒன்று அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாடு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் தொழில்துறைப் பயிற்சி மையங்கள் அமைக்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறையின் இந்த மாணவர் விரோத நடவடிக்கையை அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி கடுமையாக எதிர்க்கிறது.
சிக்கல்களில் அரசுப் பள்ளிகள்
ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனையும் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் கல்லூரி உயர்கல்வி பெறுவதில் ஆர்வமின்மையும் விருப்பமின்மையும் குடும்ப சூழல், சமூகப் பிரச்சினைகளின் தலையீடு இவற்றால் இடை நிற்றல் ஏற்படுதல் என பல சிக்கல்களை அரசுப் பள்ளிகள் சந்தித்து வருகின்றன.
மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என பள்ளிகளை மூடுதல் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வந்து கொண்டுள்ள இந்த சூழலில், பள்ளிக் கல்வி இயக்குநரின் இந்த செயல்முறைக் கடிதம், அதை மேலும் துரிதப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அரசுப் பள்ளிகளைத் தரப்படுத்தி ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை பெருமளவில் வழங்குவதற்கு பதிலாக பள்ளிகளுக்குள்ளேயே தொழில் பயிற்சி மையங்களை அமைக்க ஆரம்பித்தால், உயர் கல்வி திறன்களைப் பெற வேண்டிய நமது மாணவர்கள் அடிப்படைத் தொழில் திறன்களை மட்டுமே பெற்று வேலையாட்களாக மட்டுமே உருவாகும் சூழல் ஏற்படும். இது நமது எதிர்கால மாணவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடை செய்யும்.
தேசிய கல்விக்கொள்கைக்கு சாதகம்
மேலும் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி தேசியக் கல்விக் கொள்கை 2020 க்கு சாதகமாக உள்ளது. பள்ளி கல்வித் துறை பள்ளிகளை ITI-க்களாக மாற்றும் இந்த முடிவை கைவிடுவதோடு போதுமான ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்து தரமுயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரித்து பள்ளிக் கல்வி அமைப்பை உறுதிப்படுத்தட வேண்டும். அதே வேளையில் வேறு இடங்களில் ITIக்களை துவங்க தமிழ்நாடு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
அரசுப் பள்ளிகளை ITIக்களாக மாற்றும் பள்ளி கல்வித் துறையின் ஆபத்தான இந்த நடவடிக்கையை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரும் எதிர்த்து போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும்’’.
இவ்வாறு அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.






















