கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்புகள்! முகக்கவசம்.. ஆன்லைன் கல்வி - ஏஐசிடிஇ சொன்னது இதுதான்!
பொறியியல் கல்லூரிகளில் உள்ளே நுழையும்போதும் வெளியே வரும்போதும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் உள்ளே நுழையும்போதும் வெளியே வரும்போதும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் மூலம் கற்பித்தல் நிகழ்த்தப்பட்டது. இதற்கிடையே கோவிட் வைரஸ் பரவலின் தாக்கம் குறைந்ததை அடுத்து, மீண்டும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், தனக்குக் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா வைரஸ் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
'' * கல்வி நிறுவனங்களுக்கு உள்ளே நுழையும்போதும் வெளியே வரும்போதும் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும்.
* அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். சானிட்டைஸர் வைத்திருபது கட்டாயமாகும்.
* மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தனி மனித இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
* சுவாச வழிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும்.
* வளாகங்கள் மற்றும் பேருந்துகளை முறையாகச் சுத்தப்படுத்தி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
* கோவிட் 19 அறிகுறிகள் ஏற்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்குக் கட்டாயமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
* திறந்த இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட வேண்டும்.
* ஆசிரியர்கள் அல்லது மாணவர்களின் குடும்பத்தினர் யாராவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்கள் கல்வி வளாகத்துக்கு வரக்கூடாது.
* ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
* அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முடிவுகளுக்கு ஏற்ப, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
* பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் இந்தியா வரமுடியாத வெளிநாட்டு மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியாக கற்பித்தலை உறுதிப்படுத்த போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
* கல்லூரி வளாக நுழைவுவாயில், வெளி வாயில், கஃபடேடியா, உணவகம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
* முகக் கவசங்கள், பிற உறைகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
* 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே ஏசி வெப்பநிலை பேணப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
* உளவியல் ஆலோசனைகளை அளிக்கும் மனோதர்பன் செயலி குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 08046110007 என்ற எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும்''.
இவ்வாறு ஏஐசிடிஇ கொரோனா வைரஸ் வழிகாட்டு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்