41 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத்தேர்வு..
41 மத்திய பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு (CUCET) நடத்தப்படும்
41 மத்திய பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு (CUCET) நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்த பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாத சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக, மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்.டி படிப்புகளுக்கான உயர்தர திறனாய்வு சோதனை தொடர்பான பரிந்துரைகளை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு ஏழு பேர் கொண்டார் குழுவை அமைத்தது. இந்த வார தொடக்கத்தில், இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. நுழைவுத்தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சர் இந்த மாத இறுதியில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020 புதிய தேசிய கல்வி கொள்கையில் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. நாடு முழுவதிலும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் சிறந்த மற்றும் குறைந்தபட்ச தரத்தை உறுதிசெய்யும் பொருட்டு பொது நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை அறிமுகம்செய்யும் என்று கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது.
பலவகையான நுழைவுத் தேர்வுகள் எழுதவேண்டிய அவசியமில்லாமல் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல மத்திய பல்கலைக்கழகங்களுக்கு ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க இந்த நுழைவுத் தேர்வு உதவும் என்று குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்கப்படாமல் இருக்க, 2021 ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த கால்வியாண்டு முதல், ஆண்டிற்கு இரண்டு முறை பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கணினி அடிப்படையிலான இத்தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். இந்தி ஆங்கிலம் என இரு மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். விண்ணப்பதார்கள் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற வேண்டும். நுழைவுத் தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்: 'அ' பிரிவில் வாசிப்பு புரிதல், வாய்மொழி திறன், அளவு பகுத்தறிவு, பகுப்பாய்வு பகுத்தறிவு, பொது விழிப்புணர்வு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான 50 கேள்விகள் இருக்கும். ஆ பிரிவில் உள்ள 50 கேள்வி துறை சார்ந்த கேள்விகளாக இருக்கும்.