UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை குரல்கள் எழுந்து வருகின்றன.
மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற யுஜிசி நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. குறிப்பாக ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படும்.
ஜனவரி 14, 15, 16ஆம் தேதிகளில் நெட் தேர்வு
இதில், டிசம்பர் மாத அமர்வுக்கான தேர்வு ஜனவரி 3ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சில முக்கியத் தேர்வுகள் ஜனவரி 14, 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த நிலையில், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் அன்று நடைபெற உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை குரல்கள் எழுந்துவருகின்றன.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேர்வை ஒத்திவைக்கக் கோரி மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.
பொங்கல் விடுமுறை நாட்களில் தேர்வுகள்
கடந்த மாதம்தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதியை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது.
தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெருமக்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையதாகும். ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிரமங்களை தங்களுக்கு தரும் என்று தேர்வர்களும், பெற்றோர்களும் என்னை தொடர்பு கொண்டு தலையீட்டை நாடி உள்ளனர். ஆகவே இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர் பிரதீப் சிங் கரோலாவுக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன்’’ என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.