CBSE Exam Dates : முக்கிய அறிவிப்பு: சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்; முழு விவரம் இதோ!
2024-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய அட்டவணை வெளியாகி உள்ளது.
சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புதிய அட்டவணை வெளியாகி உள்ளது. எனினும் சில சிறிய பாடங்களின் தேர்வுகள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், திருத்தம் செய்யப்பட்ட தேர்வு அட்டவணையை, அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணலாம்.
சிபிஎஸ்இ என்று அழைக்கப்படும் இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 10ஆம் வகுப்பு retail தாள் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல ஃப்ரெஞ்சு, திபெத்தியன் தாள்களும் முறையே பிப்ரவரி 20 மற்றும் 23ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. முன்பு இவை முறையே மார்ச் 5 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தன.
12-ஆம் வகுப்புத் தேர்வில் என்ன மாற்றம்?
12ஆம் வகுப்பைப் பொறுத்தவரை Fashion Studies தாள் தேர்வின் நாள் மாற்றப்பட்டுள்ளது. முதலில் மார்ச் 11ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எப்போது தேர்வு?
வழக்கமாக 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் காலை 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளன. சில தேர்வுகள் 12.30 மணியுடன் முடிவடைகின்றன.
தமிழக மாணவர்களுக்கு எப்போது?
தமிழக மாநில பாடத்திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் 18ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
2023-ஆம் ஆண்டு தேர்வு
2023ஆம் ஆண்டில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 21 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், 12ஆம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி இருந்தனர்.
பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் மே 11ஆம் தேதி வெளியாகின. இதில் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக இருந்தது. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில் முதல் இடத்தைக் கேரளா பெற்றது. திருவனந்தபுர மண்டல மாணவர்கள் 99.91 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவது இடத்தில், பெங்களூரு மண்டலத்தில் 98.64 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். சென்னை மண்டலம் 97.4 சதவீத தேர்ச்சியோடு 3ஆவது இடத்தைப் பிடித்தனர்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.cbse.gov.in/
முழுமையான தேர்வு அட்டவணையை அறிய: CBSE Board Exams 2024: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எப்போது? : வெளியான தேதிகள்..