CBSE : 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் முக்கிய மாற்றம்: சிபிஎஸ்இ அறிவிப்பு!
11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் முக்கிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் முக்கிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் 2024- 25ஆம் கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், அதன் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் கூறி உள்ளதாவது:
2024- 25ஆம் கல்வி ஆண்டில், 11, 12ஆம் வகுப்பு ஆண்டுத் தேர்வு கேள்வித் தாள்களில் முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. இதன்படி, திறன் சார்ந்த எம்சிக்யூ எனப்படும் பல்வகை கொள்குறிக் கேள்விகள் அல்லது Case தொடர்பான கேள்விகள், ஒருங்கிணைந்த கேள்விகள் 40 சதவீத அளவுக்குக் கேட்கப்பட்டு வந்தன. இந்த கேள்விகள் 50 சதவீத அளவுக்கு உயர்த்தி கேட்கப்பட உள்ளன.
எந்த கேள்விகளில் மாற்றம்?
எனினும் ஏற்கெனவே கேட்கப்பட்டு வந்த Select response வகை கேள்விகள் (MCQs) 20 சதவீதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், constructed response வகை கேள்விகள் (குறுகிய பதில்கள், விரிவான பதில்கள் அளிக்கும் வகையிலான கேள்விகள்) 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளன.
அதாவது குறுகிய, நீண்ட பதில்களுக்கான கேள்விகள் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, பல்வகை கொள்குறி வினாக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
9, 10ஆம் வகுப்புத் தேர்வு கேள்விகளில் எந்த மாற்றமும் இல்லை
அதேநேரத்தில் 9, 10ஆம் வகுப்புத் தேர்வு கேள்விகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எம்சிக்யூ எனப்படும் பல்வகை கொள்குறிக் கேள்விகள் 50 சதவீத அளவுக்குக் கேட்கப்படும். Select response வகை கேள்விகள் (MCQs) 20 சதவீதமும், constructed response வகை கேள்விகள் 30 சதவீதமும் கேட்கப்பட உள்ளன.
வினாத் தாள் மாற்றம் குறித்து விரிவாக அறிய: https://cbseacademic.nic.in/web_material/Circulars/2024/30_Circular_2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://cbseacademic.nic.in/