மதச்சார்பின்மை, ஜனநாயகம்.. 11,12 பாடத்திட்டத்தில் முக்கியப் பகுதிகள் நீக்கம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
பலகாலமாகப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சில முக்கிய அத்தியாயங்களை பாடத்திட்டத்தில் இருந்து சிபிஎஸ்இ கைவிடுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அணிசேரா இயக்கங்கள், பனிப்போர் காலம், ஆப்ரோ-ஆசியப் பகுதிகளில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய பேரரசுகளின் வரலாறு மற்றும் தொழில்துறை புரட்சி பற்றிய அத்தியாயங்களை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து சிபிஎஸ்சி நீக்கியுள்ளது.
இதேபோல், 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில், 'உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில் இருந்து, "உலகமயமாக்கலால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம்" என்ற தலைப்பும் கைவிடப்பட்டுள்ளது. 'மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு' பகுதியில் ஃபைஸ் அகமது ஃபைஸின் உருது மொழியில் இரண்டு கவிதைகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகளும் இந்த ஆண்டு விலக்கப்பட்டுள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 'ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை' என்ற பாடத்தின் உள்ளடக்க அத்தியாயங்களிலிருந்தும் சிலவற்றை நீக்கியுள்ளது.
தலைப்புகள் அல்லது அத்தியாயங்கள் கைவிடப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணத்தைக் கேட்டதற்கு விளக்கமளித்துள்ள அதிகாரிகள், ”இந்த மாற்றங்கள் பாடத்திட்டத்தைப் பகுத்தறிவதன் ஒரு பகுதி என்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பரிந்துரைகளுக்கு இணங்குவதாகவும்”, அவர்கள் கூறியுள்ளனர்.
11ம் வகுப்பு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட அத்தியாயமான “மத்திய இஸ்லாமிய பகுதிகள்” கடந்த ஆண்டு பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின்படி, ஆப்ரோ-ஆசியப் பிரதேசங்களில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி மற்றும் அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் தாக்கங்கள் பற்றிப் பேசுகிறது.
இஸ்லாத்தின் தோற்றம், கலிபாவின் எழுச்சி மற்றும் பேரரசு உருவானது ஆகியவற்றைக் குறிப்பிடும் அரங்கங்களில் கவனம் செலுத்துகிறது.
இதேபோல், 12 ஆம் வகுப்பு வரலாற்று பாடத்திட்டம், 'முகலாய பேரரசுகள்: வரலாற்றை மறுகட்டமைத்தல்' என்ற தலைப்பில் கைவிடப்பட்ட அத்தியாயம் முகலாயர்களின் சமூக, மத மற்றும் கலாச்சார வரலாற்றை மறுகட்டமைக்க முகலாய பேரரசு வரலாற்றை ஆய்வு செய்தது.
2022-23க்கான பாடத்திட்ட நிர்ணய அமர்வு பள்ளிகளுடன் பகிர்ந்து கொண்ட பாடத்திட்டம் கடந்த ஆண்டு இரண்டு பருவத் தேர்வில் இருந்து ஒரே அமர்வில் ஒற்றை தேர்வு முறைக்குத் திரும்புவதற்கான வாரியத்தின் முடிவை மறைமுகமாக தெரிவித்துள்ளது
கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரண்டு பருவத் தேர்வு ஒரே முறையில் வைக்கப்படும் என சிறப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டாலும், நிலைமையை மனதில் வைத்து சரியான நேரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், பல காலமாகப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சில முக்கிய அத்தியாயங்களை பாடத்திட்டத்தில் இருந்து சிபிஎஸ்இ கைவிடுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.