APAAR ID: இனி எல்லாத்துக்கும் இதுதான்; பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு!
ஒரு தேசம், ஒரே மாணவர் ஐடி என்ற முன்மொழிவின் அடிப்படையில், ஒரு மாணவரின் கற்றல் பயணத்தை டிஜிட்டல் மூலம் ஆவணப்படுத்த இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தன் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு APAAR ஐடியை மாணவர்களின் பிரதான அடையாள முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. புதிய கல்விக் கொள்கை அம்சங்களின் அடிப்படையில், பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைக் கொண்டுவருவதாக மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எதற்காக இந்தத் திட்டம்?
ஒரு தேசம், ஒரே மாணவர் ஐடி என்ற முன்மொழிவின் அடிப்படையில், ஒரு மாணவரின் கற்றல் பயணத்தை டிஜிட்டல் மூலம் ஆவணப்படுத்த இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது என்ன APAAR ஐடி?
APAAR ஐடி (Automated Permanent Academic Account Registry) என்பது இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாணவர்களின் அடையாள முறைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். புதிய கல்விக் கொள்கை அம்சத்தின்படி, ஒரு தேசம், ஒரே மாணவர் ஐடி என்ற திட்டத்தின்கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது.
12 இலக்க எண்ணான இந்த ஐடி, மாணவர்களின் மதிப்பெண் அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டம், பட்டயம், சான்றிதழ்கள், கல்வி இணைச் செயல்பாடுகளில் செய்த சாதனைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
முன்பு ஏபிஐ ஐடி என்ற பெயரில் இயங்கிவந்த இந்த ஐ.டி., ஒரு மாணவரின் கல்வி செயல்பாடுகளையும் மதிப்பெண்களையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கும் ஒரு இடமாகும். இது மாணவர்களுடைய கல்விப் பயணத்தின் விரிவான பதிவை உறுதி செய்யும்.
தரவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு (Data Security And Monitoring)
APAAR ஐ.டி. தரவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட சென்சிட்டிவ் தகவல்கள், மறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த முறையை அமல்படுத்த சிபிஎஸ்இ, "APAAR ID Monitoring (AIM)" பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பள்ளிகள் ஐடியை உருவாக்க முடியும்.
கூடுதல் தகவல்களுக்கு: 1800-889-3511 என்ற எண் அளிக்கப்பட்டுள்ளது.
APAAR ID கட்டாயம் இல்லை
இதற்கிடையில், ’’நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க APAAR ID கட்டாயம் இல்லை என்றும் விரைவில் வெளியாக உள்ள தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தகவல்களைப் பயன்படுத்தி இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்’’ என என்டிஏ தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

