CBSE Syllabus: என்ன? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு பாடங்கள் 15% குறைப்பு பொய்யா? சிபிஎஸ்இ விளக்கம்!
10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 15 % குறைக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
2025ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் பாடத்திட்டம் 15 சதவீத அளவுக்குக் குறைக்கப்பட உள்ளதாக வெளியான செய்திக்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. இது அடிப்படை ஆதாரம் இல்லாத செய்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது. சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ, சமூக வாலிதளங்களிலோ வெளியிடப்படும் செய்திகள் மட்டுமே உண்மையானவை என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை ஆதாரம் அற்ற செய்தி
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறும்போது, ’’சிபிஎஸ்இ பாடத் திட்டக் குறிப்பு குறித்து எந்த அறிவிப்பையோ மாற்றத்தையோ வெளியிடல்லை. மதிப்பீட்டு முறையிலோ தேர்வு கொள்கையிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதனால் அத்தகைய செய்திகள் அனைத்துமே அடிப்படை ஆதாரம் அற்றவை என்று தெரிவித்துள்ளது’’ என்று ஏஎன்ஐ கூறி உள்ளது.
இந்தூரில் நடைபெற்ற, ’இடைவெளியைக் குறைக்கும்’ பள்ளி முதல்வர்களுக்கான மாநாட்டில் சிபிஎஸ்இ போபால் மண்டல அலுவலர் விகாஸ் குமார் அகர்வால் பாடத்திட்ட குறைப்பு குறித்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இதன்படி அனைத்து பாடங்களிலும் 15 சதவீத அளவுக்குப் பாடத்திட்டம் அளவுக்குக் குறைக்கப்படுவதாகவும் வெறுமனே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து முக்கியப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் படிப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் இல்லை
அதேபோல மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. இதன் அடிப்படையில், இறுதித் தேர்வில் மொத்தமுள்ள 100 மதிப்பெண்களுக்கு, 60 சதவீத மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டும் மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்கள் அக மதிப்பீட்டின் அடிப்படையிலும் அமைய உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த செய்திகள் அனைத்துக்குமே சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு தேதிகள் எப்போது?
இதற்கிடையே 2025ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
முன்னதாக பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.