CBSE Class 12 Exam Cancelled | சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. தற்போது சற்று கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கினாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. இந்தச் சூழலில் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர் இன்று பிரதமர் மோடியுடன் கல்வித்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் இந்த ஆலோசனையின் முடிவில் இந்தாண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவு தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "நீண்ட விவாதத்திற்கு பிறகு மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இது நம் இளைஞர்களின் உடல் நலம் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு" எனப் பதிவிட்டுள்ளார்.
Government of India has decided to cancel the Class XII CBSE Board Exams. After extensive consultations, we have taken a decision that is student-friendly, one that safeguards the health as well as future of our youth. https://t.co/vzl6ahY1O2
— Narendra Modi (@narendramodi) June 1, 2021
இந்த விவகாரம் தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இதுகுறித்து தெளிவாக விவாதித்துள்ளனர். அதில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக இன்னும் ஊரடங்கு நீடிக்கிறது. எனவே இந்தச் சூழலில் மாணவர்களை கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைக்க முடியாது என்று ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டை போல் இம்முறையும் மாணவர்கள் சிலர் தேர்வு எடுக்க விரும்பினால் அவர்களுக்கு நிலைமை சரியான பிறகு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க உரிய அறிவிப்பை விரைவில் கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "தேர்வுகளுக்காக மாணவர்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. எனவே இந்த தேர்வை ரத்து செய்வதே நல்ல முடிவாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் - பள்ளிகள் திறப்பு எப்போது?