(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் - பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழ்நாட்டில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல்பாஸ் என தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி அறிவித்துள்ளார். தலைமையாசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என்றும், எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Students from class 1 to Class 8 are declared all pass in Tamil Nadu. Here are the details -- pic.twitter.com/hSxoPDYY25
— Sangeetha Kandavel (@sang1983) June 1, 2021
மேலும், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், பள்ளிகள் திறந்தவுடன் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி கூறினார்.
இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10,11ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம், 2009 பிரிவு 16-ல், “எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்தவொரு மாணவனையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரும் தேர்ச்சியுற வேண்டும். எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுபு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
‛மாணவர்களின் எதிர்காலம் போல அவர்களின் உயிரும் முக்கியம்’ -அமைச்சர் அன்பில் மகேஷ்
மேற்படி பள்ளிகளில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சிப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கொரோனா தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே, தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். மேலும் மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.