CBSE 10th 12th Result: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ!
CBSE 10th 12th Results 2025: விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு, உரிய நடைமுறையின்படி மதிப்பெண்கள் சரிபார்ப்பு அல்லது மறுமதிப்பீடு அல்லது இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம் - சிபிஎஸ்இ.

CBSE Result 2025: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் சிபிஎஸ்இ முக்கிய மாற்றத்தை அமல்படுத்தி உள்ளது. இதன்படி மாணவர்கள், தங்களின் திருத்தப்பட்ட விடைத் தாள்களை மறு மதிப்பீடு அல்லது மறு சரிபார்ப்புக்கு முன்னதாகவே பார்க்கலாம்.
தற்போதைய நடைமுறையின்படி, மாணவர்கள் முதலில் மதிப்பெண் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் விடைத்தாள் நகல்களைக் கோர வேண்டும், பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மதிப்பெண் சரிபார்ப்பு, மறு மதிப்பீடு
இருப்பினும் இந்த ஆண்டு முதல், மாணவர்கள் தங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் நகல்களை முதலில் பெற முடியும். அவர்கள், தங்களின் விடைத் தாள்களை மதிப்பாய்வு செய்த பிறகு, மதிப்பெண் சரிபார்ப்பு, மறு மதிப்பீடு அல்லது இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாமா என்பதை அவர்கள் முடிவு செய்ய முடியும்.
இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு, மதிப்பெண் சரிபார்ப்பைத் தேர்வு செய்யலாமா, மதிப்பெண்களை மறுகூட்டல் செய்தல் அல்லது மதிப்பீடு செய்யப்படாத கேள்விகள் இருக்கிறதா என்று பார்த்தல் அல்லது ஒரு கேள்வி அல்லது பல கேள்விகளை மறுமதிப்பீடு செய்யக் கோருவதா என்பதைத் தேர்வு செய்யலாம்.
விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு, உரிய நடைமுறையின்படி மதிப்பெண்கள் சரிபார்ப்பு அல்லது மறுமதிப்பீடு அல்லது இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் எப்போது?
CBSE 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளை மாணவர்களும் பெற்றோர்களும் cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in, results.gov.in மற்றும் digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாகவும் UMANG செயலி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






















