நாமக்கல்லில் +2 தேர்வுக்கு பிட்: 11 தேர்வறை கண்காணிப்பாளர்கள் இடைநீக்கம் - அரசு அதிரடி
நாமக்கல்லில் நூதன முறையில் மாணவர்கள் பிட் அடிக்க முயன்ற விவகாரத்தில் தேர்வுப் பணியில் ஈடுபட்ட 11 ஆசிரியர்களை தேர்வுப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் மாணவர்கள் நூதன முறையில் பிட் அடிக்க முயன்ற விவகாரத்தில் தேர்வுப் பணியில் ஈடுபட்ட 11 ஆசிரியர்களை தேர்வுப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தேர்வை 8,37,311 மாணவர்கள் எழுத உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மே 28ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை 9,55,139 பேர் எழுதுகின்றனர். மே 10-ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்தத் தேர்வை 8,85,053 மாணவர்கள் எழுத உள்ளனர்.
இதற்கிடையே பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தால், மாணவரின் தேர்வை ரத்து செய்வதோடு அடுத்த ஓராண்டுக்குத் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும். தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், தேர்வு ரத்து செய்யப்படுவதோடு அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
பொதுத்தேர்வைக் கண்காணிக்க மாவட்டம் வாரியாக, ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர்கள், இணை இயக்குர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், நாமக்கல் மாவட்டத்தின் தேர்வு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்.குமார் நாமக்கல் முழுவதும் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆய்வுக்குச் சென்றார். அப்போது குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் 11-ம் வகுப்பு தேர்விற்கு முன்னதாக பாடப்புத்தகத்தை மைக்ரோ ஜெராக்ஸ் ஆகப் பிரதியிட்டு எடுத்துச்செல்வதைப் பார்த்தார். இதையடுத்து செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியின் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை கூறி மாணவர்களிடம் இருந்த பிட் பேப்பர்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தார்.
இதற்கிடையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற கணிதம், விலங்கியல் பாடத் தேர்வு அன்று பொன்.குமார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களை அவர் ஆய்வு செய்தார். அப்போதும் தேர்வு தொடங்குவதற்கு முன்னரே, மாணவர்களிடம் இருந்த பிட் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து மாணவர்கள் தேர்வில் முறைகேடாக காப்பி அடிக்க உதவியாகச் செயல்பட்டதாக தேர்வறை கண்காணிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேர்வறை கண்காணிப்பாளர்கள் பொறுப்பில் இருந்து 11 ஆசிரியர்களை இடைநீக்கம் செய்யுமாறு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், 11 ஆசிரியர்கள் தேர்வறைக் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.