மீண்டும் வேலை கொடுக்கவில்லை எனில்.. அண்ணா பல்கலை. ஆசிரியர் தற்கொலை மிரட்டல்- அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
போதிய திறமையுடன் வேலை செய்யவில்லை என்று கூறி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளா விட்டால் இறந்துவிடுவேன் என்று அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில், அரசு வேலை என்பது கனவாக மாறி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் அரசுகள் வேலை அளிப்பதை ஊக்குவித்து வருகின்றன. இந்த நிலையில் போதிய திறமையுடன் வேலை செய்யவில்லை என்று கூறி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் வேலை அளிக்கவில்லை எனில், தற்கொலை
இதுபற்றி அண்ணா பல்கலைக்கழகத்தின் பண்ருட்டி வளாகத்தில் பணிபுரியும் 40 வயது ஆசிரியர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எனக்கு மீண்டும் வேலை அளிக்கவில்லை எனில், தற்கொலை செய்து கொள்வேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்கூட்டியே எந்த தகவலும் இல்லாமல், நோட்டீஸ் அளிக்காமல், 23 ஆசிரியர்கள் இவ்வாறு வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோசமான செயல்திறன் காரணமாக இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் அந்த வீடியோவில் கூறும்போது, என்னுடைய வேலையில் நிச்சயமாக நான் தகுதி வாய்ந்தவராகவும் திறமையாளராகவும் இருக்கிறேன்.
ஆனாலும் என் திறன் சரியில்லை என்றுகூறி, வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். இது என் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. சில நாட்களுக்கு உள்ளாக எனக்கு வேலை திரும்பக் கிடைக்கவில்லை எனில், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் ஆணையர் இன்னசண்ட் திவ்யாதான் முழுக் காரணம்.
மாதம் 27 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம்
11 ஆண்டுகள் அனுபவம் கொண்ட எனக்கு, மாதம் 27 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கிடைக்கிறது. நான் திறமையில்லாதவன் என்று அழைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு என்னால் வாழவே முடியவில்லை’’ என்று குமுறி உள்ளார்.
மேலும் இதுகுறித்து தனியார் ஆங்கில நாளிதழிடம் பேசிய அவர், ’’ஓர் ஐஏஸ் அதிகாரி என்னை தகுதியில்லாதவன் என்று கூறுவதா? பிற நிரந்தர ஊழியர்களை ஒப்பிடும்போது, என்னுடைய செயல் திறன் சிறப்பாக இருக்கும்.
தமிழ் மீடியம் பள்ளிகளில் இருந்து வரும் மணவர்களுக்கு, பொறியியல் படிப்புகளின் கருத்துகள புரியவைப்பதில் சவாலை எதிர்கொள்கிறோம். அதேபோல ஜூன் மாத ஊதியம் எப்போதுமே தாமதமாகவே வழங்கப்படுகிறது’’ என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்துக் கேட்க அரசுத் தரப்பைத் தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. கல்வி அதிகாரிகள் தரப்பிலும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.






















