Anna University: அண்ணா பல்கலை. வினாத்தாள் கசிவு? பொறியியல் தேர்வு ஒத்திவைப்பு- பரபர பின்னணி!
தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வினாத்தாள் நேற்று காலையிலேயே கசிந்ததாகவும் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாள் தெரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
Anna University Question Paper Leak: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் தனியார் கல்லூரி ஒன்றில் வினாத்தாள் வெளியானதாக வெளியான தகவலை அடுத்து, சம்பந்தப்பட்ட பொறியியல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று (ஜூலை 10) மதியம் பொறியியல் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நீடித்த வளர்ச்சி என்னும் தாளுக்கான செமஸ்டர் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நீடித்த வளர்ச்சி பாடத்துக்கான தேர்வு ஒத்திவைப்பு
இதற்கிடையே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வினாத்தாள் நேற்று காலையிலேயே கசிந்ததாகவும் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாள் தெரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நீடித்த வளர்ச்சி பாடத்துக்கான தேர்வு ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும், அந்தத் தேர்வு எதனால் தள்ளி வைக்கப்படுகிறது என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் எதுவும் தெரிவிக்கவில்லை.
தேர்வு ஒத்தி வைப்பு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “ஜூலை 10-ம் தேதி பிற்பகல் நடைபெறுவதாக இருந்த சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நீடித்த வளர்ச்சி பாடத் தேர்வு ஜூலை 31-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது.
பொறியியல் கல்லூரிகளுக்கு தகவல் அனுப்ப வேண்டும்
இதனால் ஏற்கெனவே அனுப்பப்பட்ட தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகளைப் பிரிக்காமல் பல்கலைக்கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு தகவல் அனுப்ப வேண்டும். அத்துடன் தேர்வு ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு வினாத்தாள், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் ஆகியவை முன்கூட்டியே கசிந்துவிட்டதாக செய்திகள் அண்மையில் வெளியாகின. யுஜிசி நெட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.