AICTE PG Scholarship: மாதாமாதம் ரூ.12,400; முதுநிலை படிப்புக்கான உதவித்தொகை- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை நீட்டித்து ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதுநிலை படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை நீட்டித்து ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் சார்பில், முதுநிலை படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
என்ன தகுதி?
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.பார்ம்., எம்.ஆர்க். அல்லது எம்.டெஸ் (முதுகலை வடிவியல் படிப்பு) ( M.E. / M.Tech. / M.Pharm. / M.Arch./ M.Des ) படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அதாவது பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல், பார்மசி ஆகிய படிப்புகளில் முதுநிலை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கேட் , ஜிபிஏடி நுழைவுத் தேர்வு அல்லது சீட் தேர்வு (GATE/ GPAT/ CEED) அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் பகுதி நேரம், தொலைதூரக் கல்வி அடிப்படையில் முதுகலை படிப்புப் படிப்பவர்கள், மத்திய அரசின் உதவித் தொகையைப் பெற முடியாது.
கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கான விண்ணப்பிக்கக் கடைசித் தேதி நவம்பர் 30 ஆக இருந்தது. எனினும் பல்வேறு மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் சரிபார்த்து, ஏஐசிடிஇ இணையதளத்தில் தகவல்களைப் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மாணவர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் ஜனவரி 20 வரை உதவித் தொகைகு விண்ணப்பிக்கலாம். அதேபோல உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் விவரங்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் சரிபார்த்து, ஏஐசிடிஇ இணையதளத்தில் தகவல்களைப் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://pgscholarship.aicte-india.org/ என்ற இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பிற கல்வி உதவித் தொகைகள் குறித்து ஏஐசிடிஇ-ன் https://www.aicte-india.org என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
முதுநிலை படிப்பு உதவித்தொகை குறித்த முழுமையான அறிவிப்பைக் காண: https://www.aicte-india.org/sites/default/files/PG%20scholarship%20Notification%20for%20A.Y.%202022-23.pdf
கூடுதல் விவரங்களுக்கு: 011-29581119 | இ- மெயில்: PGSCHOLARSHIP@AICTE-INDIA.ORG