TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றித் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியும் பொருட்டு அகல்விளக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களைத் தரம் உயர்த்துதல்
அரசுப் பள்ளி மாணவர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறைப் பயிற்சியின் மூலம் கற்றுத்தேர்வதற்கு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டுவரும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும்.
முதற்கட்டமாக 2024- 2025ஆம் கல்வியாண்டில் 1000 மாணவர்களுக்கு மேல் பயின்றுவரும் அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்டுதாழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
அகல் விளக்கு திட்டம்
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றித் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியும் பொருட்டு, அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், இணையதளப் பயன்பாடுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும். இவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கு “அகல் விளக்கு” எனும் திட்டம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
வேறு என்ன திட்டங்கள்?
பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் வைரவிழா, காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி, ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
மேலும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும், எந்திரனியல் ஆய்வககங்கள் ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். பல்வகைத் திறன் பூங்கா அமைக்கப்படும். தொடக்கப் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவுபடுத்தப்படும்.
உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும், தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்,தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைத் தகைசால் நிறுவனமாகத் தரம் உயர்த்துதல், ஆசிரியர்களுக்குத் திறன் பயிற்சி, ஆசிரியர்களுக்குத் தொல்லியல் பயிற்சி ஆகிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களுக்கான நன்னெறிச் செயல்பாடுகள், தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்துக்குப் புதிய கட்டிடம், திசைதோறும் திராவிட திட்ட விரிவாக்கம், மிளிரும் தமிழ்நாடு திட்டம் ஆகிய 25 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

