மன உளைச்சலில் ஆசிரியர்கள்: கல்வித்துறைக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
''இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” அளிக்கப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்று கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இரட்டை நிலைப்பாடு
“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையினைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் பிரச்சனைக்கு மூல காரணமே தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டதுதான். 2009 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டபோது, 1-6-2009-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும், 1-6-2009 மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும் அப்போதிருந்த தி.மு.க. அரசு நிர்ணயம் செய்தது. தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த இரட்டை நிலைப்பாடுதான் தற்போதைய ஊதிய வித்தியாசத்திற்குக் காரணம்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டினை களையும் வகையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் வலியுறுத்தி இருந்தேன். இதனையடுத்து, அரசு சார்பில் நிதித் துறைச் செயலாளர் (செலவினம்) தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டதை அடுத்து, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
காலவரையற்ற உண்ணாவிரதம்
இந்தக் குழு அமைக்கப்பட்டு 9 மாதங்கள் கடந்த நிலையில், அவர்களுடைய கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதோ என்ற அச்சத்தில் அவர்கள், கடந்த 27ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் சிறப்பாசிரியர்களும் தங்களுடைய கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவ, மாணவியருக்கு கல்வி நன்கு கற்றுத்தரப்பட வேண்டுமென்றால் ஆசிரியர்களின் மனநிலை நன்றாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என அனைவரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கல்வியினை பாதிக்கும்
95 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க. அரசு, ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கைகளை கிடப்பில் போட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கும் செயல். இது மாணவ, மாணவியரின் கல்வியினை பாதிக்க வழிவகுக்கும்.
முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மேலும் காலம் தாழ்த்தாமல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு முரண்பாட்டினை உடனடியாக களையவும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.