அரசுக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி சூப்பர் அறிவிப்பு
அரசுக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அகில இந்திய அளவில் தலைசிறந்த 200 கல்லூரிகளில் தமிழகத்தில் 35 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நவம்பர் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார். ஏற்கெனவே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும். அதே நேரத்தில் இப்போது நியமனம் செய்யப்படுகிற பணிகளில் 10% இட ஒதுக்கீடு இருக்காது.
இன்று கல்லூரி அளவில் மண்டல துணை இயக்குனர்கள் சந்திப்பு நடைபெற்று உள்ளது. அதேபோல 17ஆம் தேதி அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுடன் சந்திப்பு நடைபெற உள்ளது. அதில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற உள்ளது. தமிழக அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரையில் புதிய கல்விக் கொள்கை அம்சங்கள் இங்கு நுழைய எந்த வாய்ப்பும் இல்லை’’.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
முன்னதாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் குறித்துப் பேசும்போது, ''தமிழகம் முழுவதும் 5,353 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 3,391 பேர் மட்டுமே யுஜிசி விதிமுறைகளுக்கு ஏற்ற கல்வித் தகுதியுடன் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். கடந்த காலங்களில் தகுதி இல்லாதவர்களும் கவுரவ பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் . அப்போது அந்தந்தக் கல்லூரி முதல்வர்களே கவுரவப் பேராசிரியர்களை நியமித்து வந்தனர். அந்த குறைபாடுகளை எல்லாம் நீக்கி முழுமையாக தகுதி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எம்ஃபில் முடித்தவர்கள் கூட துணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் விளைவாக, தகுதி குறைவான கவுரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. யுஜிசி விதிமுறைகளின்படி நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்லூரிகளில் துணை பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். அல்லது அவர்கள் பிஎச்டி முடித்திருக்க வேண்டும்.
முதல் முறையாக ஒரே ஆண்டில் 4,000 கல்லூரி நிரந்தர விரிவுரையாளர்களுக்காக தேர்வு நடத்தப்பட உள்ளது. முன்னதாக, 2007 முதல் 2015 வரை எட்டு ஆண்டுகளில், 4,654 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது ஒரே ஆண்டில் நான்காயிரம் பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வை ஏற்கெனவே கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்களும் எழுதலாம். அவர்களுக்கு, பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் கூடுதலாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்'' என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.