Anna University fees: அண்ணா பல்கலை. சான்றிதழ் கட்டணத்தை 1000% உயர்த்துவதா?- திரும்பப்பெற அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டணத்தை 1000% உயர்த்தக்கூடாது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டணத்தை 1000% உயர்த்தக்கூடாது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்துப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று அறிக்கை:
’’அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவற்றில் திருத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் 1000% வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. கல்விக்கான சான்றிதழ்களின் கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்துவது கந்துவட்டி வணிகத்திற்கு ஒப்பானது; கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ அதற்கு பதிலாக புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அந்தக் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. பிற சான்றிதழ்களின் கட்டணங்களும் குறைந்தது 66% முதல் 400% வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு மாநிலம் முன்னேறக் கல்வி மிகவும் அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் பட்டதாரி உள்ளிட்ட சில குறிப்பிட்ட பிரிவினருக்கு உயர் கல்வியும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பிரிவினருக்கும், அனைத்து வகையான கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், உயர் கல்விக்கான சான்றிதழுக்கு ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதும், சான்றிதழ் கட்டணத்தை 1000 விழுக்காடு வரை உயர்த்துவதும் எந்த வகையில் நியாயம் என்பதை அண்ணா பல்கலைக்கழகம்தான் விளக்க வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ்களில் மதிப்பெண்களோ, பெயர் விவரங்களோ தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதைத் திருத்தி புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதிப்பெண் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அது தேர்வுத் துறையின் தவறுதான். தேர்வுத் துறையின் தவறைத் திருத்தி வழங்க வேண்டியது அதன் கடமை. அதற்காக ரூ.1000 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், ஏதேனும் நிறுவனங்களில் பணிக்கு சேரும்போது, அவர்களின் சான்றிதழ் உண்மையானதுதானா? என்பதைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளும். அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழ்கள் உண்மையா என்பதைச் சரிபார்த்து சொல்ல வேண்டியது பல்கலைக்கழகத்தின் பணி. அதற்கான கட்டணத்தை ரூ.2000 ஆக உயர்த்தியிருப்பது அநீதி. பட்டச் சான்றிதழின் நகலை இரண்டாவது முறையாக வாங்க வேண்டும் என்றால், அதற்கான கட்டணம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணமே ரூ.13,610 மட்டும்தான். கிட்டத்தட்ட அதே அளவு கட்டணத்தை பொறியியல் படிப்புக்கான நகல் சான்றிதழுக்கு வசூலிப்பது சரிதானா?
பொறியியல் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்ல. அவர்களின் பெரும்பான்மையினர் கல்விக் கட்டணம் செலுத்தவே வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்கள். இதைக் கருத்தில் கொண்டு சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்குவதுதான் சரியானதாக இருக்கும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றவர் அறிஞர் அண்ணா. அவரது பெயரில் செயல்படும் பல்கலைக்கழகம் ஏழை மாணவர்களை சிரிக்க வைக்க வேண்டும்; அழ வைக்கக் கூடாது. சான்றிதழ் கட்டணங்களை உயர்த்துவதால் பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் தேர்வுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால், அதற்கு மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து திரும்பப் பெறப்பட்டது. எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மாணவர்கள் இல்லை என்பதுதான் பாரதிதாசன் பல்கலைக்கழக நிகழ்வுகள் சொல்லும் செய்தியாகும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்க வில்லை; மாணவர்களின் பொருளாதார நிலையையும் புரிந்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
சான்றிதழ் கட்டண உயர்வு மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், அதை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து பல்கலை.க்கு அரசும் அறிவுறுத்த வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.