ஹலோ ஆப் மூலம் ஏமாற்று வார்த்தைகள்.. மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது..
ஏமாற்று வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 17 வயதுடைய பிளஸ் 2 படிக்கும் மாணவி, கடந்த 4-ஆம் தேதி ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கு இ சேவை மையத்திற்கு சென்றுள்ளார். வெகு நேரம் கடந்தும் மகள் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அவரை கண்டுபிடிக்க இயலாத நிலையில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது பெண் காணாமல் போனது குறித்து புகார் மாணவியின் பெற்றோர் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூரை சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் 21 வயது ராமச்சந்திரன் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மயிலாடுதுறை போலீசார் சிறுதாவூர் சென்று சிறுமியை மீட்டதுடன் ராமசந்திரனை பிடித்துவந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராமச்சந்திரனுக்கு சிறுமிக்கும் இடையே ஹலோ ஆப் சமுக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த மாதம் இருவரும் மயிலாடுதுறையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் சிறுமியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு ராமச்சந்திரன் சிறுதாவூர் சென்றுவிட்டதாகவும், தொடர்ந்து கடந்த 4-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை ராமச்சந்திரன் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிறுமியை காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.