யூடியூப் வீடியோவை பார்த்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது!
தனது செல்போனின் யூடியூப் வீடியோவை பார்த்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பது எப்படி? என பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார்.
![யூடியூப் வீடியோவை பார்த்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது! Youth arrested for trying to rob ATM after watching YouTube video யூடியூப் வீடியோவை பார்த்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/51d186ac9c9124c19cd41f6ff55f19c6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி கிராமத்தில், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. கடந்த 16 ஆம் தேதி இரவு 1 மணிக்கு மர்ம நபர், அந்த ஏடிஎம் மிஷினை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அப்போது ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி அலாரம் அடித்தது. இதனால் அந்த நபர், பயத்தில் தப்பியோடினார். ஏடிஎம் மிஷினை உடைத்தபோது, வங்கியின் மேலாளர் செல்போனுக்கு அலாரம் மெசேஜ் சென்றுள்ளது. இதனால் அவர், உடனே மல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
சேலம் மாவட்டம் புறநகர் டிஎஸ்பி தையல் நாயகி, இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அங்கு, ஏடிஎம் இயந்திரத்தின் முன் பகுதி உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அதில் , ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
அதில், ஏடிஎம் மிஷினை உடைத்த நபரின் உருவம் பதிவாகியிருந்தது. அதனைக் கொண்டு தனிப் படை காவல்துறையினர் விசாரித்ததில், பனமரத்துப்பட்டி அருகே உள்ள பெரமனூர் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் விஜய குமார் (20) இக்கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். விஜய குமாரை நேற்று தனிப் படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சேலத்தில் உள்ள தனியார் நகைக் கடையில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பல திடிக்கிடும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்தது, தனது செல்போனின் யூடியூப் வீடியோவை பார்த்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பது எப்படி? என பார்த்து தெரிந்து கொண்டதாகவும், பிறகு அதன்படியே நள்ளிரவு நேரத்தில், யாரும் இல்லாத ஏடிஎம் மையத்திற்கு வந்து, அந்த இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற போது, அலாரம் அடித்ததால் அருகில் இருந்தவர்கள் யாராவது பார்த்து விடப் போகிறார்கள் என்று அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் விஜய குமார் கூறியுள்ளார். இதையடுத்து, கைதான விஜய குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்த டிஎஸ்பி தையல் நாயகி தலைமையிலான தனிப்படை காவல்துறையினருக்கு, உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)