Crime: காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு.. காதலன் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட காதலி..
கேரம் விளையாட்டு வீராங்கனையான அஞ்சலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார்.
புதுச்சேரியில் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் வீட்டிற்கு சென்று காதலி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஞ்சலி. இவர் புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பி.காம் படித்து முடித்துள்ளார். கேரம் விளையாட்டு வீராங்கனையான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளார். நட்பாக தொடங்கிய அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் அடிக்கடி காதலன் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே ஒருமுறை காதலனுடன் அஞ்சலி பைக்கில் வெளியே சென்றுள்ளார். பின்னர் வீட்டின் முன்னால் வந்து அவரை அந்த வாலிபர் இறக்கி விட்டுள்ளார். இதனைப் பார்த்த அஞ்சலியின் சகோதரர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரை அழைத்து வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் அந்த வாலிபர் செய்தது பற்றியும் கோபமடைந்துள்ளனர்.
ஆனால் அஞ்சலி தொடர்ந்து அந்த வாலிபருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் என்னுடன் நீ பேசுவதை விரும்பவில்லை என்றும், என்னை உன்னுடன் பேசக்கூடாது என்று சத்தம் போட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்களின் கருத்தால் அஞ்சலி மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் வழக்கம்போல நேற்று முன்தினம் காதலன் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.
அங்கு வீட்டுக் கதவு சாத்தப்பட்டு இருந்த நிலையில், உள்ளே சென்ற அவர் நேரடியாக மாடியில் உள்ள காதலன் அறைக்குச் சென்று நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வீட்டில் யாரும் இல்லாததால் அஞ்சலி எடுத்த விபரீத முடிவு யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவரது காதலன், அஞ்சலி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவனைக்கு அஞ்சலியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அஞ்சலி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)