Crime: அரசு வேலை பொய்.. 2 திருமண திட்டம்... அப்பா, அம்மா முதல் பங்களா வரை எல்லாமே பொய்.. செளமியா சிக்கியது எப்படி?
பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட இப்பெண் இந்த வார இறுதியில் ஒருவரையும் அடுத்த வார இறுதியில் வேறு ஒரு நபரையும் திருமணம் செய்யவிருந்தார்.
கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களைத் தெரியும் என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பண்ம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 வயது பெண்ணான இவர் திருப்பூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அப்பெண்ணிடம் காவல் துறையினர் ஈடுபட்ட விசாரணையில் அப்பெண் குறித்த பல தகவல்களும் தெரிய வந்தன. அதன்படி. கரூர் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆதி விநாயகர் கோயில் சந்துவில் வசித்து வரும் இப்பெண்ணின் பெயர் சவுமியா என்ற சபரி. காந்தி கிராமத்தில் வீடு எடுத்து வசித்து வரும் இவர் தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மறுமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினரிடம் கூறி வந்துள்ளார்.
இதனை நம்பிய பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமாருக்கு சவுமியாவை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். தாம் ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாக சிவக்குமாரிடம் கூறிய சவுமியா தமக்கு அமைச்சரை தெரியும் என்றும் அவர் மூலம் சிவக்குமாருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இதனை நம்பிய சிவக்குமார் குடும்பத்தினர் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை சவுமியாவிடம் கொடுத்துள்ளனர். மேலும், தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 20 நபர்களுக்கு அரசு வேலை பெறுவதற்காக முன்பணமாக 10 லட்சம் ரூபாய் வரை சவுமியாவிடம் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் கரூருக்கு வந்த சிவக்குமாரை அழைத்துச் சென்று அங்குள்ள பெரிய பங்களாவை காட்டி அது, தமது தாயாரின் வீடு என்றும் தாம் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் சவுமியா கூறியுள்ளார்.
இந்நிலையில் முன்னதாக கரூரில் உள்ள தன் உறவினருக்கு சவுமியாவின் போட்டோ ஒன்றை சிவக்குமார் அனுப்பி அவரைப் பற்றி விசாரிக்குமாறு கோரியுள்ளார். தொடர்ந்து சவுமியா பெற்றோர் என அடையாளம் காட்டிய நபர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். சவுமியா காட்டிய அந்தப் பெரிய பங்களாவும் அவருக்கு சொந்தமில்லை என்பதை தெரிந்து கொண்ட உறவினர் சிவக்குமாரிடம் இந்த தகவல்களை சொல்லி எச்சரித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கரூரில் வீட்டு உரிமையாளரை சிவக்குமார் சந்தித்தபோது அவரும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சிவக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சவுமியா தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று அவரை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் சவுமியாவை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேரை திருமணம் செய்து, லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சவுமியா, வரும் ஞாயிறன்று சிவக்குமாரையும், அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை கோவையைச் சார்ந்த மற்றொரு இளைஞரையும் திருமண செய்ய இருந்தது குறிப்பிடத்தக்கது.