Goondas Act: ‛குண்டாஸ்’ என்றால் என்ன? குண்டர் சட்டம் பாய்ந்தால் என்ன ஆகும்?
தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார்.
பொதுவாக செய்திகளை படிப்போர்கள் குற்றம் தொடர்பான் செய்திகளை விரும்பி படிப்பார்கள். குற்றச்செய்திகளில் கைது, விடுதலை, ஜாமீன் என்று பல வார்த்தைகள் வரும். அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது என்றெல்லாம் வரும். இதில், குண்டர் சட்டம் என்று செய்திகளில் படிப்போர், அது என்ன என்பது குறித்து சிலருக்கு தெரியாமல் இருக்கும். அவர்களுக்காக குண்டர் சட்டம் என்றால் என்ன? அதன் அதிகார வரம்புகள் என்ன? குண்டர்கள் என்பவர்கள் யார்? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டோருக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், வனக்குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து அதன் மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்கு என்றுக் கூறி 1982-இல் தமிழக அரசால் இயற்றப்பட்டதுதான் குண்டர் தடுப்புச் சட்டம் எனப்படும் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம். இது 12-03-1982 அன்று இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றாலும், 5-01-1982 அன்று முதல் செயல்பாட்டிற்கு வந்ததாக கருதப்படும்.
தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடியவர் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்படுவார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை என்பதால், கைது செய்யப்பட்டவர் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுப் பெற்ற நீதிபதி மற்றும் ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட நிர்வாக விசாரணைக் குழு மட்டுமே அணுக முடியும். கைதுக்கு எதிரான முறையீடு நிர்வாக விசாரணைக்குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டால் பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம் என்று இந்தச் சட்டத்தின் ஷரத்து தெரிவிக்கிறது.
குண்டர் சட்டத்தின் மூலம் காவல்துறை அதிகாரிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை எந்தவித விசாரணையுமின்றி சிறையில் அடைக்க முடியும். மாநகரங்களில் காவல் துறை ஆணையரும், கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.
குண்டர்கள் என்ற வரையறையை விளக்கும்போது, இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16,17,22,45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.
இந்த சட்டத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு திருட்டு வீடியோ, சிடி மற்றும் குற்றமும், 2006ஆம் ஆண்டு மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு குற்றங்களும் சேர்க்கப்பட்டது.