Kohli on Dhoni: “தோனியின் அறிவுரையை தீர்க்கமாக பின்பற்றுகிறேன்” - கோலி நினைவுகூர்ந்த ப்ளாஷ்பேக்
தோனி சொன்ன அறிவுரையை விராட் நினைவுகூர்ந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று டெஸ்ட் தொடர் சம நிலையில் உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை தொடங்குகிறது.
எப்போதும் போட்டிக்கு முன்பாக இந்திய கேப்டன் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் முன்பாக இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் இம்முறை இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, இன்று மாலை 3.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த விராட், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க இருப்பதை உறுதி செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், முகமது சிராஜ் அடுத்த போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பதையும் உறுதி செய்தார். காயம் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்போது, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பண்ட் அவுட்டான விதம் விமர்சனத்திற்கு உள்ளானது பற்றி கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, “அனைவரும் தவறுகள் செய்வார்கள். அந்த தவறை உணர்ந்து கொள்ளுதல் நல்லது. ஒரு முறை, எம்.எஸ் தோனி என்னிடம் பேசும்போது ’நீ செய்கின்ற தவறுகளை அடுத்த 7 அல்லது 8 மாதங்களுக்கு திரும்ப இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.’ என்றார். இந்த அறிவுரை ஏற்று தீர்க்கமாக பின்பற்ற தொடங்கிவிட்டேன்” என தெரிவித்தார்.
தோனி சொன்ன அறிவுரையை விராட் நினைவுகூர்ந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை கேப்டவுனில் விளையாடியுள்ள 5 போட்டிகளில் இந்திய அணி 3ல் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கேப்டவுன் மைதானத்தில் இந்திய டெஸ்ட் போட்டியை இதுவரை வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரை சமன் செய்துள்ளன. நாளை தொடங்க இருக்கும் போட்டி தொடரை வெல்லப்போகும் அணி எது என்பதை தீர்மாணிக்கும்.
கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே, கடைசி டெஸ்ட் போட்டியை வென்று விராட் கோலி தலைமையிலான அணி வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.