பிட்காயின் முதலீடு: ஒட்டுமொத்த தொகையை இழந்த விரக்தியில் ஆண் தற்கொலை!
பிட்காயின் மற்றும் பங்குச்சந்தையில் பல லட்சத்தை முதலீடு செய்து இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வீரர் கணேசன் மகன் முரளி கிருஷ்ணன் (34). BE, EEE பட்டதாரியான முரளி கிருஷ்ணன் வேலூரில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவனத்தில் டவர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் முரளி கிருஷ்ணன் வேலூர் மாவட்டம் வேலூர் மாநகருக்குட்பட்ட சேண்பாக்கத்தில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.
இச்சூழலில், சேண்பாக்கத்தில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த முரளி கிருஷ்ணனின் சக அறை நண்பர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட முரளி கிருஷ்ணணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தற்கொலை செய்து கொண்ட முரளி கிருஷ்ணணின் மனைவி காயத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் தற்போதைக்கு சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையிலும், முரளி கிருஷ்ணனின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரிலும், தற்கொலை செய்துகொண்ட முரளி கிருஷ்ணன் பிட்காயின் எனப்படும் கிரிப்ட்டோ கரண்சியில் பணத்தை முதலீடு செய்து பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதேபோல ஆன்லைன் பங்கு சந்தையிலும் முதலீடு செய்ததாகவும். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் முரளி கிருஷ்ணன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் பிட்காயினில் எவ்வளவு தொகை முதலீடு செய்தார் என்பது குறித்து இதுவரை தெளிவான எந்தவித தகவலும் இல்லாத நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முரளி கிருஷ்ணனின் தந்தை ஓய்வு பெற்றபோது வந்த பணத்தை இவரிடம் கொடுத்ததாகவும் அதையும் இவர் பிட்காயின் மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து சுமார் 12 லட்சம் முதல் 20 லட்சம் வரை பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு இணையதளங்கள் மக்களிடம் ஆசையை தூண்டும் வகையில் விளம்பரங்களை செய்து வருவதும். இதில் வரும் நம்பத்தாகாத விளம்பரங்களை பொது மக்கள் நம்பி அடிமையாகி பணத்தை இழந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற நம்பகத்தன்மையில்லா மற்றும் போலியான பக்கங்கள் மூலம் அதிகளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புல்லதால் இது போன்ற பண பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம் என வேலூர் மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.