Teachers booked on POCSO Act : சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மீது பாய்ந்தது போக்சோ!
மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் - பாபாவிற்கு உதவிய 2 ஆசிரியைகள் மீது 9 சட்ட பிரிவுகளில் வழக்கு!
சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாரதி, தீபா ஆகிய 2 ஆசிரியைகள் மீது 9 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் அளிக்க சில ஆசிரியர்களும் உடந்தையாக இருந்தனர் என்ற குற்றசாட்டு வெளிவந்த நிலையில், ஆசிரியர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக செயல்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் மீது அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து பாலியல் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றசாட்டு வழக்கு நேற்று முன்தினம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் நேற்று விசாரணை அதிகாரிகளாக டிஎஸ்பி குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சிவசங்கர் பாபா இங்கே இல்லாத நிலையில், அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது. புகார் கொடுத்த மாணவிகளிடம் விசாரணை நடத்தி பெற்ற வாக்குமூலம் அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டதால் சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விதமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மாணவிகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்ததால் கடந்த 11-ஆம் தேதி பாபாவை நேரில் ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா தான் உத்தரகாண்ட் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னால் ஆஜராக முடியாது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
சிவசங்கர் பாபா மீதும் மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் 354, 355, 363, 365 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 15 புகார்கள் வந்ததாகவும் அதில் ஐந்து புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.