மாட்டிகிட்டியே பங்கு.. வழக்கறிஞர் வீட்டில் நகை திருடிய தவெக பெண் நிர்வாகி!
தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகி வழக்கறிஞர் வீட்டில் 11.5 சவரன் நகை திருடியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது விளவங்கோடு. இந்த பகுதியில் அமைந்துள்ளது செருவலூர் பகுதி. இங்கு வசித்து வரும் இளம்பெண் அர்ஷிதா. இவர் திண்டிவனத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பயின்று வருகிறார்.
வழக்கறிஞர் வீட்டில் திருட்டு:
இவர் வழக்கறிஞர் பயிற்சிக்காக அவ்வப்போது நாகர்கோயில் நீதிமன்றத்திற்கு செல்வது வழக்கம் ஆகும். அவ்வாறு செல்லும்போது கன்னியாகுமரி மாவட்டம் பழவிளை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் நாகர்கோயில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
வழக்குத் தொடர்பாக இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அர்ஷிதா கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வழக்கறிஞர் விஜயகுமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர் வந்து சென்ற நாளில் விஜயகுமார் வீட்டில் அவரது தாயாரின் அறையில் இருந்த 11.25 சவரன் நகை திருடு போகியுள்ளது.
தவெக பெண் நிர்வாகி கைது:
இதையடுத்து, காவல்துறையில் விஜயகுமார் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையில் வீட்டிற்கு வந்து சென்ற அர்ஷிதா மீது சந்தேகம் திரும்பியுள்ளது. அவரிடம் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் அர்ஷிதா நகையை திருடியது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அர்ஷிதாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அர்ஷிதா தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேல்புறம் ஒன்றியம் புலியூர்சாலை ஊராட்சியின் தமிழக வெற்றிக் கழக இணை செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
தவெக-வின் பெண் நிர்வாகி வழக்கறிஞர் வீட்டில் நகை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















