'நம்மகிட்ட நல்லா பழகுறாரே..' ஏமாந்த வாலிபர் - ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் கைது
தெளபிக்கிடம், ஜெத்ரோ நான் போலீசில் பணியாற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார். நம்மகிட்ட நல்லா பழகுறாரே. போலீசாக இருந்தாலும் நல்ல நண்பராக இருக்காரே என்று தௌபிக் நினைத்துள்ளார்.

திருச்சி: நான் போலீஸ் என்று கூறி ஏலத்தில் விடப்படும் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் தெளபிக். இவர், அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு டீக்கடையில் பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு அடிக்கடி டீ குடிக்க ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ரோ (எ) ஷியாம் (24) வந்துள்ளார். அப்போது தெளபிக்குக்கும், ஜெத்ரோவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நண்பர்களாகி உள்ளனர்.
அப்போது தெளபிக்கிடம், ஜெத்ரோ நான் போலீசில் பணியாற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார். நம்மகிட்ட நல்லா பழகுறாரே. போலீசாக இருந்தாலும் நல்ல நண்பராக இருக்காரே என்று தௌபிக் நினைத்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் ஏலம் விடும் வாகனங்களைக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துத் தருகிறேன். அதை நீங்கள் கூடுதல் விலைக்கு விற்கலாம் என்று ஜெத்ரோ, தெளபிக்கிடம் தெரிவித்துள்ளார். இதுவும் நல்ல ஐடியாவாக இருக்கே என்று நனைத்த தௌபிக் ரூ. 1 லட்சம் வரை ஜெத்ரோவிடம் வாங்கியுள்ளார்.
ஆனால் கூறியபடி வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துத் தராமல் இருந்துள்ளார் ஜெத்ரோ. இதனால் தௌபிக் பலமுறை இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் ஜெத்ரோ என்னனவோ கதைகள் கூறி வந்துள்ளார். இதனால் வெறுத்து போன தௌபிக் வாகனத்தை ஏலத்தில் எடுத்து தரவேண்டாம். எனது பணத்தைத் திருப்பி தாருங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார் ஜெத்ரோ.
இப்படி மாதக்கணக்கில் சென்றதால் இதுகுறித்து தெளபிக் அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெத்ரோ திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே ஜே.ஜே நகர்ப் பகுதியில் இருப்பதாகத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் ஜெத்ரோவை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் போலீசில் பணியாற்றுகிறேன் எனக் கூறி ஏமாற்றியதும், தெளபிக்கிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெத்ரோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசில் பணியாற்றுவதாகக் கூறி வாலிபரிடம் ரூ. 1 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது





















