நாளை அம்பேத்கர் பிறந்தநாள் - மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராமத்தில் 144 தடை உத்தரவு அமல்
மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் மரியாதை செலுத்தும் நிகழ்வு சர்ச்சை காரணமாக 5 நாட்களுக்கு 144(3) தடை உத்தரவு பிறப்பித்த மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரண்டு சமூகத்தினர்களும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து மேலும் கலவரம் ஏற்படாதவாறு தடுத்தனர்.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில் பட்டவர்த்தி கிராமத்தில் அதே நாளில் அப்பகுதியில் உள்ள காத்தாய் அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற இருப்பதால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் மதகடி பகுதியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மணல்மேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தலைமையில் இப்பிரச்சனை தொடர்பாக இருசமூகத்தினர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பொது அமைதி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மேலும், பொது மக்களுக்கு அச்சம் ஏற்பட வழிவகுக்கும் என்பதால், பொது அமைதி சமூக நல்லிணக்கம், மக்கள் அச்சத்தைப் போக்கும் விதமாக மதகடி பகுதியிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 5 நாட்களுக்கு 144 (3) தடை உத்தரவை கோட்டாட்சியர் பாலாஜி பிறப்பித்துள்ளார். 13 ஆம் தேதி காலை 6 மணி முதல் 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் 2 நபர்களுக்கு மேல் கூடி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.