Crime: ஜாமீனில் வந்தவர் ஒரு வாரத்தில் வெட்டிக்கொலை... திருவாரூரில் அதிகரிக்கும் பழிக்குப் பழி கொலைகள்..!
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் மற்றும் பழிக்கு பழி வாங்கும் பிரச்சனை காரணமாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமினில் வந்து ஒருவாரம் ஆன நிலையில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் 25 வயதான சந்தோஷ் குமார் என்பவர் அடிதடி வழக்கில் 2 மாதம் சிறைவாசம் அனுபவித்து விட்டு ஒரு வாரத்திற்கு முன்பு பிணையில் வந்திருந்தார். இந்த நிலையில் சந்தோஷ்குமார் தனது வீட்டிலிருந்து கடைத்தெருவிற்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்த போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த வந்த 14 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தோஷ் குமாரை கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சந்தோஷ்குமாரின் தலையில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்தோஷ் குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணவாளநல்லூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவரை சந்தோஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கில் சந்தோஷ்குமார் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறையில் இருந்து வந்து ஒரு வாரத்திற்குள் சந்தோஷ்குமார் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்கிற அடிப்படையில் எரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அனைத்து தொடர்ந்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் தற்போது பிரபாகரன், சாமிநாதன், விக்கி(எ)விக்னேஷ், ரமேஷ் குமார், வெங்கடேஷ் ,கணபதி, பிரகாஷ் ஆகிய ஏழு நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் மூலம் கைது செய்து சிறையில் அடைக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் மற்றும் பழிக்கு பழி வாங்கும் பிரச்சனை காரணமாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக நடைபெறும் கொலை சம்பவங்களை தடுப்பதில் தவறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் கொலை கொள்ளை சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்