'சிறுவயதில் வன்கொடுமை.. யூ ட்யூப்பில் வியூஸ் இல்லை..' - இணையத்தை அதிர வைத்த இளைஞரின் தற்கொலை கடிதம்!
யூடியூப் வீடியோவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் வீடியோவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐஐடி மாணவர்:
தெலங்கானா மாநிலம் சைதாபாத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளைஞரான சந்திரசேகரன் தீனா. இவர் குவாலியர் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் படித்துவந்தார். சைதாபாத் அருகே உள்ள பிஜி ரெட்டி பகுதியில் ஆதர்ஷ் ஹைட்ஸ் குடியிருப்பில் அவரது பெற்றோருடன் வசித்துவந்துள்ளார். 4 ஆண்டுகள் பொறியியல் படிப்பை முடித்த அவர் விடுமுறைக்காக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ஐஐஐடிஎம்-ல் படித்துக் கொண்டே யூடியூப் சேனலும் நடத்தி வந்துள்ளார் தீனா. ‘செல்ஃப்லோ’ என்ற யூடியூப் சேனலில் வீடியோ கேம்கள் பற்றிய ரிவியூக்களை பதிவேற்றி வந்ததோடு, ஜென்ஷின் இம்பேக்ட் வீடியோ கேம் விளையாட்டின் ஒவ்வொரு ஸ்டேஜ் மற்றும் நுணுக்கங்களை பதிவேற்றி வந்துள்ளார். அவரது யூடியூப் பேஜிற்கு 29.4 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.
இரவு முழுவதும் வீடியோ கேம்:
வீட்டில் இருந்த தீனா, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீடியோ கேம் விளையாடி வந்ததோடு, அவற்றை யூடியூபில் பதிவேற்றுவதை கடந்த 4 ஆண்டுகளாக செய்துவந்திருக்கிறார். பெரும்பாலும் தனியாக இருந்த அவர், பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் கூட சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். பெற்றோரும் தீனாவை கவனிக்காமலேயே விட்டுள்ளனர். படித்து முடித்துவிட்ட தீனா மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும், யூடியூப் பேஜில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்ததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றுகாலை தான் குடியிருந்த 5 அடுக்கு குடியிருப்பின் உச்சிக்குச் சென்ற தீனா கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓஸ்மானியா மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான கடிதம்:
விசாரணையின் போது, தனது மனக்குறைகளை கொட்டி பெரிய ட்விட் லாங்கர் ஒன்றை எழுதியிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில் “தான் சிறுவயது முதல் தற்போதுவரை அவதி பட்டுவந்ததாகவும், இந்த மன அழுத்தம், சோகம் மற்றும் கோபம் ஆகியவற்றை தாங்க முடியாமல் இந்த உலகை விட்டுச் செல்வதாகவும் கூறியுள்ளார். குழந்தையாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், தனது பெற்றோர்கள் எப்போதும் தன் முன்னே சண்டையிட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். நல்ல அப்பா கிடையாது, அம்மாவும் ஆரம்பம் முதலே சரியாக வழிகாட்டவில்லை. எனது குழந்தைப் பருவம் கேவலமாக இருந்தது, பதின்பருவமும் மிகவும் மோசமாக இருந்தது; இளம்பருவமும் மோசமாக இருந்தது. என் வாழ்க்கையில் வந்த எல்லோரும் என்னை ஏதோ ஒருவகையில் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிட்டார்கள். கல்லூரியில் படிக்கும்போது கூட எல்லோருக்கும் நான் ஒரு கருவியாக தான் பயன்படுத்தப்பட்டேன். எப்போதும் கடைசி ஆளாக தேர்ந்தெடுக்கப்படும் ஆளாக இருந்தேன், எதற்காகவும் நான் அழைக்கப்பட்டதில்லை, படிப்பைத் தாண்டி வெளியில் உதவியதில்லை. அதைப் போன்றே வீட்டிலும் உணர்கிறேன்." என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், ”எனக்கு சிறந்ததொரு முன்னேற்றம் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். என் சிறுவயதில் விளையாடுவதற்குக் கூட நண்பர்களுக்கு செலவழிக்க நேர்ந்தது. நான் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தபோது நீ எல்லாம் ஏன் வாழவேண்டும் என்று என்னை சரியாக உருவாக்கவேண்டியவர்களே கேட்டார்கள். நான் இரண்டாவது படிக்கும்போதே எனது டைரியின் ஹோம் ஒர்க் பக்கத்தில், “ஒருநாள் அப்பார்ட்மெண்ட் மாடியில் இருந்து குதித்து சாக வேண்டும்” என்று எழுதியிருந்தேன். அதற்காக எனது ஆசிரியர் என்னை திட்டினார். என் பெற்றோர்கள் என்னை அடித்தார்கள். அதற்குப் பிறகு எதுவுமே மாறவில்லை. அதுதான் சிவப்புக் கொடியாக இருந்திருக்கவேண்டும். ஆனால் என்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு அது போதுமானதாக இருக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.
”சந்தோஷ தருணங்களே இல்லை:”
மேலும், “எனது மூளை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். 7ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே நினைவு திறன் குறைய ஆரம்பித்துவிட்டது. எனது மூளை என்னைப் போன்ற நபர்களை உருவாக்கத் தொடங்கிவிட்டது. அவர்களுடனேயே பேச ஆரம்பித்தேன். அது பிஐடி இல்லை என்று நினைக்கிறேன். என்னைப்போலவே 5 பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் கூச்சப்படுபவர், ஒருவர் போல்டானவர், ஒருவர் தொழில்நுட்பம் தெரிந்தவர், ஒருவர் சோம்பேறி இப்படியாக இருந்தனர். நான் என்னை குறிப்பிடும் போது கூட, நாம், நமக்கு அவர்கள் என்று தான் குறிப்பிட்டேன். ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சொந்த காரணங்களால் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. என்னால் முடிந்தவரை பாசிட்டிவாகவே இருக்க முயற்சி செய்தேன். ஆனால், எதையுமே என்னால் மாற்ற முடியவில்லை. என் சொந்த வாழ்க்கையில் நடந்த சந்தோசமான தருணங்கள் எதையுமே என்னால் நினைவுபடுத்த முடியாது." என்று தீனா தனது கடிதத்தில் கூறியுள்ளார். ”
”யூடியூப் சேனல் மட்டுமே மகிழ்ச்சி:”
”எனது யூடியூப் சேனல் பிக்அப் ஆனது மட்டுமே எனக்கு கிடைத்த ஒரே மகிழ்ச்சி. அதில் வந்த கமெண்ட்டுகளில் உரையாடியது தான் எனக்கு கிடைத்த மகிழ்ச்சி. எனது சேனல் ஒவ்வொரு மாதமும் வளர்ந்து வந்தது. என் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்லது என்றால் அது தான். நான் மக்களை நேரடியாக சந்திக்க விரும்பினேன். கண்டண்ட் கிரியேட்டர்களை சந்தித்து அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விரும்பினேன். ஆனால் ஒரு நல்ல நண்பனாக எப்படி பேசவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் யாரையும் சந்திக்க்கவில்லை. எனது சாவு யாராலும் நினைவுகூறப்படாது என்பது எனக்குத் தெரியும். தயவுசெய்து மக்களிடம் கருணையுடன் இருங்கள், அவர்கள் நன்றாகவும், சாதாரணமாகவும் தோன்றினாலும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது.” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் தீனா.