’நீங்க ஒரு சீல் வைய்ங்க, நாங்க ஒரு சீல் வைக்கிறோம்’ டாஸ்மாக் கடை ஊழியர்களின் மதுப்பணி...!
வேலியே பயிரை மேய்ந்த கதையாய் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடையை திறந்து மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு, புதிதாக தங்கள் பங்கிற்கு ஒரு சீலை வைத்துவிட்டு, ஓனர் கணக்காய் செயல்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தி தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் முழு ஊரடங்கு போது மளிகை கடை காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்து நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் விடுமுறை எனவும், மறு உத்தரவு வரும் வரை மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் கடந்த மாதம் பத்தாம் தேதி அனைத்து மதுபான கடைகளும் பூட்டப்பட்டு மேற்பார்வையாளர்கள் மூலம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
அதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 108 மதுபான கடைகளும் பூட்டப்பட்டு, கடை மேற்பார்வையாளர்கள் மூலம் கடைகளுக்கு சீலும் வைக்கப்பட்டது, ஆனால், மாவட்டத்தில் சில நபர்கள் மதுபானங்களை வாங்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். டாஸ்மாக் கடை பூட்டியிருக்கும்போது இவர்களுக்கு மட்டும் எப்படி மதுபானங்கள் கிடைக்கிறது என நினைத்த, உண்மையான குடிகமன்கள் சிலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து, இந்த தகவலின் அடிப்படையில் ஒரு சிலரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மதுபான கடையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் சீல் வைத்த கடையைத் திறந்து அதிலிருந்து மதுபான பாட்டில்களை எடுத்துகொண்டு, மீண்டும் அந்த கடைக்கு தாங்களாகவே சீல் வைத்த சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள்தான் பூட்டிய கடையில் உள்ள மதுபான பாட்டில்களை எடுத்து வந்து கள்ளச்சந்தையில் ஒரு பாட்டிலுக்கு ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக விற்று லாபம் பார்த்து வந்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாய் டாஸ்மாக் கடை ஊழியர்களே இப்படி திருட்டு வேலையில் ஈடுபட்டு, அரசு சார்பில் வைக்கப்பட்ட சீலை பிரித்து, தாங்களாவே சீல் வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினருக்கும், டாஸ்மாக் மண்டல மேலாளருக்கும் புகார் சென்றிருக்கும் நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இப்படி, திருவாரூர் மாவட்டத்தின் பல இடங்களில் ஊருக்கு வெளியே இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளிலும் சில ஊழியர்கள், நைசாக கடையை திறந்து தங்கள் கள்ளாவை கட்டிக்கொண்டிருப்பது குறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கவனம் கொள்ளவேண்டும். கவனம்கொள்ளவில்லையென்றால், பலர் கவலைக்கு உள்ளாகவேண்டியதாக இருக்கும்.