கோழித் தீவனத்திற்கு கடத்தப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
கடையிலிருந்தும், பொது மக்களிடம் குறைந்த விலைக்கும் அரிசியை வாங்கி கொண்டு, மாடு, கோழி தீவனத்திற்கும் வாங்கி செல்கின்றனர்
தஞ்சையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மினிடோர் வாகனத்தில் கடத்தப்பட்ட 2,500 ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் துறைக்கும், குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், குடிமைப் பொருள் வழங்கல் பறக்கும்படை தனி வருவாய் ஆய்வாளர் கபிலன் ஆகியோர் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள மேலவஸ்தாசாவடி பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அச்சாலையில் புதுக்கோட்டை நோக்கி சென்ற மினிடோர் வாகனத்தை மறித்து சோதனையிட்டனர்.
மேலும் வாகனத்தில் பின்புறம் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், ரேஷன் அரிசியுடன் மினிவேனையும், டிரைவரையும் உணவு பொருள் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், மினிவேனை ஓட்டி வந்தவர் வலம்புரியை சேர்ந்த டிரைவர் தினேஷ் என்பதும், 50 மூட்டைகளில் 2500 கிலோ அரிசி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், தஞ்சாவூர் பகுதியிலிருந்து ரேசனை அரிசியை கடையிலிருந்தும், பொது மக்களிடம் குறைந்த விலைக்கும் அரிசியை வாங்கி கொண்டு, மாடு, கோழி தீவனத்திற்கும் வாங்கி செல்கின்றனர் என்ற தகவல் ரகசியமாக அதிகாரிகளுக்கு தெரியவருகிறது.
தஞ்சை பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை சேகரித்து, அவற்றை மூட்டை கட்டி கொண்டு வரப்பட்டதா? அல்லது வேறு எங்காவது இருந்து மொத்தமாக எடுத்து வரப்படுகிறதா? என்பது குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி எங்கே கொண்டு செல்லப்படுகிறது? இந்த கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ரேசன் அரிசி எந்தக்கடையிலிருந்து கொண்டு வரப்பட்டது, கடத்துவதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள், அலுவலர்கள், அனைவரத மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில், அரசு வழங்கும் அரிசியை விலைக்கு வாங்கி கடத்தப்படுவதால், அவர்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், ரேசன் அரிசி கடத்துபவர்களை கண்டறிந்து, இனி வரும் காலத்தில் இது போன்ற அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். ரேசன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி மீது வழக்கு பாய காரணமான சொத்து விபரம் இதோ!
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 69 இடங்களில் தொடரும் ரெய்டு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்