(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: பட்டப்பகல்.. நட்ட நடு வீதி.. ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவர்கள் - நடந்தது எப்படி?
மத்திய பிரதேசத்தில் டியூசன் ஆசிரியை முன்னாள் மாணவர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது மோரினா மாவட்டம். இந்த மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிர்வார் சிங். இவர் தான் வசித்து வந்த பகுதியின் அருகில் டியூசன் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஆசிரியருக்கு துப்பாக்கிச்சூடு:
இந்த டியூசனில் பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் பொதுத்தேர்விற்கு தயாராகும் மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் தங்களது வாகனத்தில் இருந்தவாறே ஆசிரியர் கிர்வார் சிங்கை அழைத்துள்ளனர்.
தொடக்கத்தில் அந்த இருவரும் ஆசிரியரிடம் நிதானமாக பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், அது வாக்குவாதமாக மாறியது. வாக்குவாதம் முற்றியபோது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் சட்டென்று தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து கிர்வார் சிங்கை நோக்கி சுட்டனர். கிர்வார் சிங்கின் வயிற்றுப்பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்ததில் அவர் அந்த இடத்திலே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம்பக்கத்தினரிடம் சிக்கிக்கொள்ளும் முன் அந்த இருவரும் தப்பிச்சென்றனர்.
முன்னாள் மாணவர்கள்:
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கிர்வார் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியரை சுட்டுக்கொன்ற இருவரும் முன்னாள் மாணவர்கள் என்பதை கண்டுபிடித்தனர். ஜாவ்ரா சாலைப்பகுதியில் கிர்வார்சிங் குலேந்திரா பயிற்சி மையம் என்ற டியூசன் சென்டரை நடத்தி வருகிறார். இந்த டியூசனில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுச் சென்ற 2 மாணவர்களும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக பயிற்சி பெற்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் முறையாக டியூசன் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அப்போதே கிர்வார் சிங்கிற்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலிலே அவர்கள் டியூசன் ஆசிரியர் கிர்வார் சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஆனாலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கிர்வார்சிங் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் டியூசன் ஆசிரியரை முன்னாள் மாணவர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Tiruvannamalai: ஜாதி சான்றால் கல்லூரியில் சேர முடியவில்லை; மாணவி விபரீத முடிவு - திருவண்ணாமலையில் சோகம்
மேலும் படிக்க: Crime : ’உணவில் மயக்க மருந்து’ :பெண்ணுக்கு 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை.. கணவனே ரெக்கார்ட் செய்த கொடுமை.. பகீர்..