Tiruvannamalai: ஜாதி சான்றால் கல்லூரியில் சேர முடியவில்லை; மாணவி விபரீத முடிவு - திருவண்ணாமலையில் சோகம்
திருவண்ணாமலையில் ஜாதி சான்று இல்லாததால் கல்லூரி படிப்பை தொடர முடியாத மாணவி பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
![Tiruvannamalai: ஜாதி சான்றால் கல்லூரியில் சேர முடியவில்லை; மாணவி விபரீத முடிவு - திருவண்ணாமலையில் சோகம் Tiruvannamalai student could not continue her college studies due to her caste certificate died after consuming pesticides TNN Tiruvannamalai: ஜாதி சான்றால் கல்லூரியில் சேர முடியவில்லை; மாணவி விபரீத முடிவு - திருவண்ணாமலையில் சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/99114345b911221ba222769db79eb5f71687446086549113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை அடுத்த திருக்கோவிலூர் செல்லும் சாலையில், எடப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 80-நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின் பிரதானத் தொழில் பன்றி வளர்ப்பதாக இருந்து வருகிறது. இவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துவதற்கும் முதன்மைத் தொழிலாக பன்றியினை வளர்த்து, அதனை விற்பனை செய்தும் வருகின்றனர். இந்நிலையில் எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ராஜேஷ்வரி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.
அப்போது கல்லூரி நிர்வாகத்தில் சாதி சான்று கேட்டுள்ளனர். மாணவியிடம் இல்லாததால் மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. தன்னுடன் படித்த சக மாணவிகள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்ததால் அவர் மட்டும் கல்லூரியில் சேர இயலாததால், மனமுடைந்த மாணவி, கடந்த 17-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்த நபர்கள் மாணவியை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ராஜேஸ்வரியின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமடைந்தது. இதனால் மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் எங்களுடைய பெண்ணுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். ஆனால் எங்களுக்கு சாதி சான்றிதழ் அளிக்கவில்லை அளித்து இருந்தால் எங்களுடைய பெண் உயிரிழந்திருக்கமாட்டாள் என்று தெரிவித்தனர்.
”எங்களிடம் மாணவியோ அல்லது மாணவியின் சம்பந்தப்பட்டவர்கள் இது வரையில் சாதி சான்றிதழ் கேட்டு மனுக்கள் அளிக்கவில்லை. அளித்திருந்தால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சான்றிதழ் அளித்து இருப்போம்” என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதற்கிடையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பன்னியாண்டி சங்கத்தைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்டனர். அப்போது அவர்கள், பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரிக்கு எஸ்.சி சாதிச் சான்றிதழை கொடுக்காமல் காலம் தாழ்த்திய வருவாய் துறையை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும் அவர்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060) ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.”
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)