சீர்காழி அருகே டாஸ்மார்க் கடையை உடைத்து மதுபானங்கள் திருட்டு
சீர்காழி அருகே அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு முழு ஊரடங்கு உத்தரவை தமிழகத்தில் பிறப்பித்துள்ளது. இதனால் மருந்தகங்கள், பால் கடைகள், உணவகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் இயங்க தடை விதித்துள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடை யான டாஸ்மார்க் கடை இயங்கவும் தடை உள்ளது.

இதனால் கடந்த சில வாரங்களாக மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் தங்களை எவ்வாறு ஆவது போதைக்கு உட்படுத்திக் கொள்ள மதுப் பிரியர்கள் பல்வேறு தவறான வழிகளை கையாண்டு வருகின்றனர். மேலும் இதனை பயன்படுத்திக் கொண்டு பல கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக மது போதைக்காக பெயிண்டில் கலக்கப்படும் வேதிப்பொருள், ஃபேவிகால் உள்ளிட்டவற்றை உட்கொண்டு சிலர் இறக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. மேலும் அரசு மதுபான கடைகளான டாஸ்மார்க் கடைகளில் சுவர்களை ஓட்டை போட்டு, கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் மது பாட்டில்களை திருட்டில் ஈடுபடும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கடவாசல் கிராமத்தில் இயங்கி வந்த அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அங்கு வைத்திருந்த உயர்ரக மது பானங்கள் 550 பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கடை மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 550 உயர்ரக மதுபான பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் போது அனைத்து அரசு மதுபான கடையான டாஸ்மார்க்குகளில் உள்ள அனைத்து மது பானங்களையும் காவல்துறை பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் தற்போது அந்த முறையை கடைபிடிக்காமல் பல்வேறு மதுபான கடைகளில் மது பானங்களுக்கு உரிய பாதுகாப்பு இன்றி காணாமல் போகும் சம்பவம் நடந்தேறி வருகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மற்ற மதுபான கடைகளில் உள்ள மதுபாட்டில்களை சென்றமுறை செய்தது போல், பொதுவாக ஒரு இடத்தில் வைத்து பாதுகாத்து மக்கள் வரிப்பணத்தை வீணாகாமல் காக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.





















