ரவுண்டு கட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை.. லஞ்சபணத்தை விழுங்கிய வி ஏ ஓ.. தொண்டையில் சிக்கிய பணம்!
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 5ஆயிரம் லஞ்சம் கேட்டு, பேரம் பேசிய வி.ஏ.ஓ குமரேசன் இறுதியாக ரூ. 4,500 கேட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்வரி. இவரது தந்தை கைலாசம், தந்தை இறந்த நிலையில். வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு வாழப்பாடியில் வசித்து வரும் தங்கை மகன் தினேஷ் குமாரை (27) உதவிக்கு அழைத்துச் சென்றுள்ளார். எம்.பி.ஏ பட்டதாரியான தினேஷ் குமார், இ-சேவை மையத்தின் மூலம் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். பின்னர், சேலம் மாநகராட்சியின் மையப்பகுதியில் உள்ள அழகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் குமரேசனிடம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தது குறித்து தெரிவித்துள்ளார். வாரிசு சான்றிதழ் குறித்த ஆவணங்களை சரி பார்க்கத் தொடங்கிய வி.ஏ.ஓ குமரேசன், அப்போது ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் சான்றிதழ் தருவேன் என வி.ஏ.ஓ குமரேசன் கூறியுள்ளார்.
அதற்கு அனைத்து சான்றோர்களும் சரியாக உள்ளது, இ-சேவை மையத்தில் முறையாக விண்ணப்பித்து வந்துள்ளேன் பிறகு எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தினேஷ் குமார் லஞ்சம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பேரம் பேசிய வி.ஏ.ஓ குமரேசன் இறுதியாக ரூ. 4,500 கேட்டுள்ளார். இதையடுத்து தினேஷ் குமார், சேலம் லஞ்ச ஒழிப் புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். கடந்த 2 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனை படி, ரசாயனம் தடவிய ரூ. 4,500 ஐ கொடுத்த போது, அதனை வி.ஏ.ஓ குமரேசன் பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப் புத்துறை போலீசார் வி.ஏ.ஓ குமரேசனை கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், வி.ஏ.ஓ குமரேசன் வழக்கில் சிக்கியது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சம்பவத்தன்று ரசாயனம் தடவப்பட்ட ரூ. 4,500ஐ தினேஷ் குமாரிடம் போலீசார் கொடுத்துள்ளனர். அதில் ரூ. 2 ஆயிரம் நோட்டு இரண்டும், 500 நோட்டு ஒன்னும் என ரூ. 4,500 இருந்துள்ளது. இதனை வி.ஏ.ஓ குமரேசன் பெற்றவுடன், லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ய சுற்றி வளைத்தனர். இதனால் சுதாரித்துக்கொண்ட குமரேசன், லஞ்ச பணத்தை திடீரென வாயில் போட்டு மென்று விழுங்கினார்.
ஆனால், அந்த பணம் அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டது. உடனே அவரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தொண்டையில் சிக்கிய பணத்தை வெளியே எடுத்துள்ளனர். பிறகு விசாரணை நடத்தி அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த தகவல் வருவாய்த்துறை அலுவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே லஞ்ச வழக்கில் கைதான வி.ஏ.ஓ குமரேசன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.