Crime: சம்பள உயர்வுக்கு இடையூறு... சப்-இன்ஸ்பெக்டரை அடித்துக் கொன்ற சக போலீஸ்காரர்.. பொதுமக்கள் அதிர்ச்சி
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பசவராஜ் மற்றும் பங்கஜ் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தில் பசவராஜ் கார்க்கிற்கு ரத்தகாயம் ஏற்பட்டது.
மகாராஷ்ட்ராவில் சம்பள உயர்வுக்கு இடையூறாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் ரெயில்வே போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு காவல் உதவி ஆய்வாளராக பசவராஜ் கார்க் என்பவர் பணிபுரிந்து வந்தார். அதே காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பங்கஜ் யாதவ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பசவராஜ் மற்றும் பங்கஜ் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தில் பசவராஜ் கார்க்கிற்கு ரத்தகாயம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பங்கஜ் யாதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பங்கஜ் யாதவுக்கு சம்பள உயர்வு கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவர், சம்பள உயர்வு தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் பங்கஜை சந்திக்காததால், அதற்கு காரணம் காவல் உதவி ஆய்வாளர் பசவராஜ் கார்க் என நினைத்து அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 8.40 மணி அளவில் கல்யாணில் உள்ள ரெயில்வே போலீஸ் தங்குமிடத்தில் பசவராஜ் கார்க்கை பங்கஜ் யாதவ் சந்தித்துள்ளார். அப்போது ஊதிய உயர்வை தடுத்து நிறுத்தியது தொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் டென்ஷனான பங்கஜ் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் பசவராஜ் தலையில் பல முறை ஓங்கி அடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார்.
சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த சக போலீசார் பலத்த காயமடைந்த பசவராஜ் கார்க்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பசவராஜ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கொல்சேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் பங்கஜ் யாதவை தீவிரமாக தேடி வந்தனர்.
இதில் அவர் ராய்காட் மாவட்டம் பென் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார் பங்கஜ் ராஜை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.